பைனலில் சபலென்கா – ரிபாகினா: யு.எஸ்., ஓபனில் மோதல்

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பைனலில் சபலென்கா, ரிபாகினா மோதுகின்றனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், உலகின் ‘நம்பர்-1’ பெலாரசின் சபலென்கா 28, டபிள்யு.டி.ஏ., தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 32, மோதினர்.

முதல் செட்டை 7-5 எனக் கைப்பற்றிய சபலென்கா, இரண்டாவது செட்டை 6-2 என வென்றார். ஒரு மணி நேரம், 20 நிமிடம் நீடித்த போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ சபலென்கா 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறினார்.

ரிபாகினா அபாரம்: மற்றொரு அரையிறுதியில், உலகின் ‘நம்பர்-2’ வீராங்கனையான கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 27, டபிள்யு.டி.ஏ., ரேங்கிங்கில் 4வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் கோகோ காப் 22, மோதினர். முதல் செட்டை 3-6 என இழந்த ரிபாகினா, பின் இரண்டாவது செட்டை 6-4 எனக் கைப்பற்றினார். மூன்றாவது செட்டில் அசத்திய ரிபாகினா, 6-4 என வென்றார்.

இரண்டு மணி நேரம், 9 நிமிடம் நீடித்த போட்டியில் ரிபாகினா 3-6, 6-4, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதல் முறையாக பைனலுக்குள் நுழைந்தார். பைனலில் சபலென்கா, ரிபாகினா பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

மாயா ஜோடி கலக்கல்

ஜூனியர் பெண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மாயா ரேவதி, உக்ரைனின் ஆன்டோனியா சுஷ்கோவா ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ரஷ்யாவின் பெலிட்சடா, புஷ்கரேவா ஜோடியை வீழ்த்தியது.

செரினா வழியில்…

யு.எஸ்., ஓபனில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், வரிசையாக 4 முறை (2011-14) பைனலுக்கு முன்னேறினார். இதில் ‘ஹாட்ரிக்’ பட்டம் (2012-14) வென்றார். இதேபோல, தொடர்ச்சியாக 4 முறை (2023-26) பைனலுக்குள் நுழைந்த சபலென்கா, ‘ஹாட்ரிக்’ பட்டத்தை கைப்பற்ற காத்திருக்கிறார். இவர், 2024, 25ல் கோப்பை வென்றிருந்தார்.

Source link