டெஹ்ரான்: ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் போர் சூழலுக்கு மத்தியில், பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
உலகில் எண்ணெய் வளமிக்க நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது, மேற்காசியாவில் உள்ள ஈரான். அங்கிருந்துதான் பல நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அத்துடன் உலகிலேயே மிகக் குறைந்த பெட்ரோல் விலையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகவும் இருக்கிறது.
அமெரிக்காவுடனான போரைத் தொடர்ந்து, பெட்ரோல் பயன்பாட்டில் பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. மாதத்துக்கு, 110 லிட்டர் வரை பயன்படுத்துவோருக்கு சலுகை விலையில் பெட்ரோல் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது கடுமையான தட்டுப்பாட்டை ஈரான் சந்தித்து வருகிறது. இதையடுத்து, மாதத்துக்கு 110 லிட்டருக்கு மேல் பயன்படுத்துவோர் இனி, ஒரு லட்சம் ரியால் செலவிட வேண்டியிருக்கும். கடந்த டிச.,ல் உயர்த்தப்பட்ட விலையுடன் ஒப்பிடுகையில் இது இரண்டு மடங்காகும்.
ஈரானில் தினசரி பெட்ரோல் நுகர்வு கடந்த மாதத்தில், 14.5 கோடி லிட்டராக உயர்ந்துள்ளது. ஆனால், உள்நாட்டு உற்பத்தி திறன், 12.2 கோடி லிட்டராக மட்டுமே உள்ளது.
ஈரானின் தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தி, 37 லட்சம் பேரல்களாகும். அதில், 24 லட்சம் பேரல்கள் வரை சுத்திகரிப்பு செய்யப்பட்டு வந்தது.
