பெங்களூரு: அமைதியான, போதைப்பொருள் இல்லாத எதிர்காலத்தை உருவாக்க இளைஞர்கள் முன்னிற்க வேண்டும் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கர் கூறினார்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள சர்வதேச வாழும் கலை மையத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 400 இளைஞர்கள், அதன் நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கருடன் கலந்துரையாடினர். உறவுகள் , வேலை செய்யும் முறை, மனநலம், ஆன்மிகம் மற்றும் இன்றைய காலகட்டத்தில் உள்ள சவால்கள் வரை பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடினர். மேலும், இளைஞர்கள் போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்
அவர்கள் மத்தியில் ஸ்ரீ ரவிசங்கர் பேசியதாவது: இளைஞர்கள் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தீவிரப் பங்காற்ற வேண்டும். அவர்கள் நாட்டை முன்னோக்கி அழைத்துச் செல்வதுடன், சுறுசுறுப்பாகவும் ஆர்வத்துடனும் செயல்பட வேண்டும். அமைதியான, போதைப்பொருள் இல்லாத எதிர்காலத்தை உருவாக்க இளைஞர்கள் முன்னிற்க வேண்டும்
வாய்ப்புகள் நிறைந்த உலகிற்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ளும் அதே வேளையில், தமிழகத்தின் வளமான கலாசாரப் பாரம்பரியத்துடனும் இளைஞர்கள் தொடர்பில் இருக்க வேண்டும். தமிழ் மொழி மற்றும் கலாசாரம் உலகளவில் பரவி உள்ளதால், பங்கேற்பாளர்கள் தங்கள் வேர்களைப் பற்றி அறிந்துகொள்ளவும், அதே சமயம் உலகம் முழுவதும் உள்ள பிற மொழிகள், கலாசாரங்கள் மற்றும் வாய்ப்புகளுக்குத் திறந்த மனதுடன் இருக்கவும் வேண்டும்.
நீங்கள் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். எதற்காக வேண்டுமானாலும் பிரார்த்தனை செய்யலாம். ஆனால் உங்கள் கவலைகள் மற்றும் சுமைகளை அனைத்தையும் இங்கேயே விட்டுவிட்டு, மகிழ்ச்சியான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ வேண்டும். அமைதியான வாழ்க்கையை வாழ்வது என்பது ஒரு நவீன பாணி. ஆன்மிக வாழ்க்கையை வாழ்வதும் ஒரு நவீன பாணிதான். நாம் எதையும் புன்னகையுடன் செய்ய வேண்டும்.
அதற்கு நமக்கு மன உறுதி தேவை. அந்த உறுதியை வளர்த்துக்கொள்வதற்கான வழிகளாக மூச்சுப் பயிற்சி, தியானம் உள்ளன. நானும் அறிவியலை ஆதரிக்கிறேன். அறிவியலுக்கும் ஆன்மிகத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. அப்படித்தான் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். அவற்றுக்கு இடையே எந்த முரண்பாடும் இல்லை.
தமிழ் அடையாளத்தைக் கொண்டாடும் அதே வேளையில், சமூகப் பொறுப்புணர்வு குறித்த வலுவான அறைகூவலையும் இக்கூட்டம் முன்வைத்தது. அனைவருக்கும் நன்மை செய்யுங்கள். நாம் மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். அந்த விருப்பத்தை உங்கள் இதயத்தில் கொண்டிருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
