புதுடெல்லி: நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் மாணவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியதற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் போது, தீவிர போராட்டம் நடைபெறுகிறது என்பதற்காக காவல் துறையினரின் வரம்பு மீறிய நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களின் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்தப் போராட்டங்களின் போது மாணவர்களின் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதாகவும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அவ்வாறு மாணவர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அந்த மனுக்கள் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக் ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர்களுக்காக மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் மற்றும் வழக்கறிஞர் பவுசியா ஷக்கீல் ஆகியோர் ஆஜராகி, “மாணவர் போராட்டத்திற்கு மிக அதிக அளவில் காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, மாணவர்கள் மீது தடியடி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதோடு, ஏ.கே.47 ரக துப்பாக்கிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது” என்றனர்.
அப்போது பேசிய தலைமை நீதிபதி சூர்ய காந்த், “அமைதியான முறையில் போராடுவதற்கான உரிமை குடிமக்களுக்கு அரசியலமைப்பால் முழுமையாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது, அதனை மறுக்க முடியாது. மேலும், தீவிர போராட்டம் நடைபெறுகிறது என்ற காரணத்தை காட்டி காவல்துறையின் வரம்பு மீறிய நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது” என்றார்.
அப்போது காவல் துறையினர் சார்பாக ஆஜராகியிருந்த வழக்கறிஞர், “போராட்டக்காரர்களால் காவல் துறையினர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர், பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஜாய்மால்யா பக் ஷி, “மாணவர்கள் மட்டுமின்றி பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்கள் உட்பட ஒவ்வொரு தனிநபரின் உயிரும் முக்கியத்துவம் வாய்ந்தது” என்றார்.
இதைதொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி சூர்ய காந்த், “போராட்டத்துக்கென ஒரு நடைமுறை இருக்க வேண்டும். அதற்கான உரிய இடவசதி இருக்க வேண்டும், அமைதி வழி போராட்டத்துக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இருக்கக்கூடாது. ஆனால்,போராட்டம் என்ற பெயரில் சமூக விரோதச் செயல்கள் ஏதேனும் நடைபெற்றால் அதன் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கலாம்.மேலும் மாணவர்கள் போராட்டம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும் ஒன்றாக இணைத்து நாளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என்றார்.
