போராட்டத்தை தீயசக்திகள் கெடுக்க முயற்சி: வாங்சுக் மனைவி குற்றச்சாட்டு

புதுடில்லி: ‘நீட்’ இளநிலை தேர்வில் நடந்த முறைக்கேட்டை கண்டித்தும், இந்த விவகாரத்தில் பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜந்தர் மந்தரில் நடக்கும் இந்த போராட்டத்துக்கு, லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் ஆதரவு தெரிவித்தார். கடந்த மாதம் 28ல் போராட்டக் களத்திற்கு வந்த அவர், உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததை அடுத்து, போராட்டம் நடந்த இடத்தில் இருந்து அவரை சமீபத்தில் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார், மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கும் அவர் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோர் முன்னிலையில், 26 நாள் போராட்டத்தை நேற்று முன்தினம் இரவு அவர் முடித்துக் கொண்டார்.

இந்நிலையில், சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டது குறித்து, அவரின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ நேற்று கூறியதாவது:

போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு சட்ட ரீதியாகவோ அல்லது உடல்ரீதியாகவோ எந்த பாதிப்பும் ஏற்படாது என மத்திய அரசு உறுதியளிக்க வேண்டும் என, சோனம் வாங்சுக் வலியுறுத்தி உள்ளார்.

ஏனெனில், போராட்டம் நடத்துவது அவர்களின் அரசியலமைப்பு உரிமை. மிகுந்த அமைதி, மன உறுதி மற்றும் பொறுமையுடன் அவர்கள் போராடி வருகின்றனர். உலகின் பிற இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு இவர்கள் முன்மாதிரியாக திகழ்கின்றனர். இந்த சூழலை பயன்படுத்தி, தங்கள் சொந்த நலன்களை புகுத்தவும், போராட்டத்தை கெடுக்கவும் தீய சக்திகள் முயன்று வருகின்றன.

அத்தகைய சக்திகளை அடையாளம் காண, மத்திய அரசு முறையான விசாரணை நடத்த வேண்டும். மாணவர்களின் அனைத்து போராட்டங்களையும் கண்ணியமான முறையில் அணுகிய மத்திய அரசுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசின் வாக்குறுதி

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அறிவுறுத்தலின்படி, மத்திய அமைச்சர்கள் நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோர், ஹரியானாவின் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாங்சுக்குடன் பேச்சு நடத்தினர். அவரது கோரிக்கைகள் குறித்து பார்லி.,யில் விவாதிக்கப்படும் என இருவரும் உறுதியளித்தனர். இதன் முடிவில், உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் நிறைவு செய்தார்.
இது குறித்து தன் சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள காணொளியில், ‘தோல்வியடைந்து வரும் தேர்வு முறை குறித்து பார்லி.,யில் விவாதிக்கப்படும் என்றும், நீட் வினாத்தாள் கசிவால் தற்கொலை செய்தவர்களின் குடும்பங்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கப்படும் என்றும், ஜந்தர் மந்தரில் போராடும் மாணவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படாது என்றும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது’ என, குறிப்பிட்டுள்ளார்.

Source link