போலி மருந்து வழக்கை 3 மாதத்தில் முடிக்க வேண்டும்: சிபிஐக்கு ஐகோர்ட் உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்தாண்டு பதிவு செய்த போலி மருந்து வழக்கை, சிபிஐ மூன்று மாதத்தில் விசாரணையை முடித்து, இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பிரபல மருந்து நிறுவனமான ‘சன் பார்மா’ பெயரில் புதுச்சேரியில் போலி மருந்துகள் தயாரித்து நாடு முழுவதும் விற்பனை செய்வதாக கடந்தாண்டு புகார் எழுந்தது. அதன்பேரில், சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிந்து, போலி மருந்து தொழிற்சாலை மற்றும் பல்வேறு குடோன்களில் ஆய்வு நடத்தி, 200 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக, சிபிசிஐடி போலீசார் இரண்டு வழக்குகள் பதிந்து, ராஜா (எ) வள்ளியப்பன், விவேக் வெங்கடேசன் உள்ளிட்ட 26 பேரை கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், வழக்கில் இருந்து ஜாமினில் வெளியே வந்த விவேக் வெங்கடேசன் மற்றும் ராஜா ஆகியோர், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

வழக்கு விசாரணையின்போது, விவேக் வெங்கடேசன் மற்றும் ராஜா தரப்பில், ‘மருந்துகள் தொடர்பான குற்றங்களை மருந்து ஆய்வாளர்கள் மட்டுமே விசாரிக்க அதிகாரம் உள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்ய அதிகாரம் இல்லை. மேலும், இதே குற்றச்சாட்டிற்கு நாட்டின் பிற பகுதிகளில் ஏற்கனவே வழக்குகள் உள்ளதால், சிபிசிஐடி போலீசார் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என, வாதிடப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், ”பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் காப்புரிமை சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களை விசாரிக்க போலீசாருக்கு முழு அதிகாரம் உள்ளது.​மருந்துகளின் அசல் லேபிள், பேக்கேஜிங் மற்றும் 3டி பாதுகாப்பு பட்டைகளை போலியாக பயன்படுத்தி நுகர்வோர்களையும், விநியோகஸ்தர்களையும் ஏமாற்றியிருப்பது உறுதியாகிறது.

​புதுச்சேரியில் நடந்த இந்த சம்பவம் புதிய குற்றச்சாட்டு என்பதால், வழக்கை ஆரம்பக்கட்டத்திலேயே ரத்து செய்ய முடியாது. ​தற்போது இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி சிபிசிஐடியிடம் இருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

சிபிஐ இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடித்து, 12 வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Source link