துபாயில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் க்ரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தோனேசியா மகளிர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மகளிர் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் மகளிர் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்தோனேசிய மகளிர் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த அணிக்கு துவக்கம் கொடுத்த மரியா கோரசோன் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். இவருடன் களமிறங்கிய மற்றொரு தொடக்க வீராங்கனையான ரஹமாவதி பங்கெஸ்துதி 2 ரன்னுக்கு பெவிலியன் திரும்பினார்.
இந்தோனேசியா ஏமாற்றம்:
தொடர்ந்து களமிறங்கிய நி லூ தேவி ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் நந்தா சகரினி பொறுப்பாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினார். நிதானமாக ஆடிய இவர் 52 பந்துகளை எதிர்கொண்டு 39 ரன்களை (4 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்தார். பின்னர் களமிறங்கியவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனால் இந்தோனேசிய மகளிர் அணி 19.4 ஓவர்களில் வெறும் 73 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சுரக்ஷா கோடீ 3 விக்கெட்டுகளையும், இஷா ஓஸா, ஹீனா, வைஷ்ணவி தலா 2 விக்கெட்டுகளையும், சமைரா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
யுஏஇ அபாரம்:
74 எனும் எளிய இலக்கை துரத்திய ஐக்கிய அரபு அமீரகம் மகளிர் அணிக்கு தொடக்கம் கொடுத்த தீர்த்தா சதிஷ் 11 ரன்கள் எடுத்த போது தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். இவருடன் களமிறங்கிய கேப்டன் இஷா 29 பந்துகளில் 30 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய ரினிதா 22 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்கம் முதலே ரன் குவிப்பில் கவனம் செலுத்திய ஐக்கிய அரபு அமீரகம் கடைசியில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில் ஐக்கிய அரபு அமரீகம் மகளிர் அணி 13.1 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 75 ரன்களை எடுத்தது. இதன் மூலம் அந்த அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தோனேசியா மகளிர் அணி சார்பில் சோஃபியா 2 விக்கெட்டுகளையும், அரியானி மற்றும் சங் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
