சாலை வசதி இல்லாததால் மணப்பெண் ஒருவர் மணக்கோலத்துடன் 18 கி.மீ மணமகன் வீட்டுக்கு நடந்தே சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் புல்ஹார் என்ற கிராமத்தில் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி ஷர்மிளா என்ற பெண்ணுக்கு அனில் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. மணமகள் ஷர்மிளா வீட்டில் திருமணம் முடிந்த பிறகு, உண்டாவா கிராமத்தில் உள்ள மணமகன் அனில் வீட்டிற்கு உறவினர்களுடன் ஷர்மிளா காரில் சென்றார். சிறிது தூரம் காரில் பயணித்த அவர்கள், சாலை வசதி இல்லாததாலும் கரடு முரடான பாதைகள் இருந்ததாலும் நடந்து செல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதனால் மணமகள் ஷர்மிளா உள்ளிட்ட உறவினர்கள், கரடுமுரடான பாதையில் சுமார் 18 கி.மீ தூரம் வரை நடந்தே சென்று அனில் வீட்டிற்கு சென்றனர். அதிலும் குறிப்பாக கனமான எடை கொண்ட லஹங்கா என்ற உடையுடன் ஷர்மிளா, நடந்தே சென்றது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மிகவும் சோர்வடைந்து நடந்து சென்ற ஷர்மிளாவை கிராம மக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
லஹங்கா உடையுடன் நடந்து சென்ற ஷர்மிளாவிடம், அங்கிருந்த நபர் ஒருவர் விவரத்தை கேட்டு வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில் புல்ஹாரில் இருந்து உண்டாவா வரை தான் நடந்து செல்வதை விளக்கிய அவர், எதிர்காலத்தில் மற்றவர்களும் இதுபோன்ற சிரமங்களைச் சந்திக்காதவாறு, இந்தப் பகுதியில் சாலை அமைத்துத் தருமாறு முதலமைச்சரைக் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக பேசிய ஷர்மிளா, “சாலை வசதிகள் முறையாக இருக்க வேண்டும் என்று முதல்வரிடம் நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
