‘மதம் மாறிய பிறகு எஸ்.சி, எஸ்.டி சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோர முடியாது’: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தேனி மாவட்டம் பெரியகுளம் கள்ளிப்பட்டி தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2019 முதல் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்தவர் ரவிகுமார். பின்னர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். இந்நிலையில், கள்ளிப்பட்டி பள்ளி முதல்வர் அருளானந்தன் கோவில் மற்றும் அம்புரோஸ், டேனியல் ஜேம்ஸ், எமர்சன் டேவிட் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘தான் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இந்து. பள்ளியில் மேல் சாதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் தன்னையும், பிற பட்டியல் சாதியைச் சேர்ந்த ஆசிரியர்களையும் பாகுபாடுடன் நடத்தி அவமானப்படுத்தினர். இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. என் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி எல்.விக்டோரியா கெளரி விசாரித்தார். பள்ளி முதல்வர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.பாஸ்கர் மதுரம் வாதிடுகையில், ‘மனுதாரர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டார். உசிலம்பட்டி எஸ்.டி.ஏ திருச்சபையில் 2015-ல் ஞானஸ்தானம் பெற்றுள்ளார். தொடர்ந்து பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக செயல்பட்டு வந்ததால் குடியாத்தம் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்’ என்றார்.

அப்போது நீதிபதி, ‘மனுதாரர் எஸ்.டி.ஏ திருச்சபையில் ஞானஸ்தானம் பெற்றுள்ளதற்கு ஆதாரம் உள்ளது. ஆனால், மனுவில் தான் ஒரு இந்து எனக் குறிப்பிட்டுள்ளார். வழக்கு தொடரும் நபர் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். வன்கொடுமை புகாரானது பாதிக்கப்பட்டவரை அவமதித்தல், அச்சுறுத்தல் வேண்டுமென்றே நடந்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரை அவரது பட்டியல் சாதி அல்லது பட்டியல் பழங்குடியின அடையாளத்தின் காரணமாக அவமானப்படுத்துவது நோக்கமாக இருந்திருக்க வேண்டும். சம்பவம் பொது இடத்தில் நடந்திருக்க வேண்டும். மனுதாரர் புகாரில் இந்த விபரம் இல்லை. நிர்வாக நடவடிக்கையை துன்புறுத்தல் எனக் கூறி போலீஸ் நடவடிக்கைக்கு உத்தரவிட முடியாது.

எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சிறப்புத் தண்டனைச் சட்டங்களை அவற்றின் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள்ளேயே செயல்படுத்தப்பட வேண்டும். இந்து மதத்தில் இருந்து மாறிய பிறகு மீண்டும் பழைய மதத்துக்குத் திரும்பியதற்கான ஆதாரம் இல்லாத நிலையில் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோர முடியாது. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.” என்று கூறி உத்தரவிட்டார். 

Source link