மதுபாட்டிலுக்கு கூடுதல் ரூ.10 வசூல்: ஒரே நாளில் 67 டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி சஸ்பெண்ட்; அமைச்சர் விக்னேஷ் நடவடிக்கை

மதுபாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிடக் கூடுதலாக ரூ.10 வசூலித்த புகாரின் பேரில், ஒரே நாளில் 67 டாஸ்மாக் பணியாளர்களைப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து அமைச்சர் விக்னேஷ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்த விற்பனையாளர்கள், விற்பனை உதவியாளர்கள் என மொத்தம் 67 பேர் மீது இந்த ஒழுங்கு நடவடிக்கை பாய்ந்துள்ளது. சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் டாஸ்மாக் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. அவ்வாறு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்ட பிறகும் பல கடைகளில் கூடுதல் பணம் வசூலிப்பது தொடர்ந்ததால், பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, தற்போது ஒரே நாளில் 67 ஊழியர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது தமிழக அரசு ஊழியர்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக சட்டசபையில் அமைச்சர் விக்னேஷ் ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பில், டாஸ்மாக் கடைகளில் கூடுதல் பணம் வசூலிப்பது முதல்முறை கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர் 3 மாதங்களுக்குத் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுவார். அதே நபர் மீண்டும் அடுத்த முறையும் அதே தவறைச் செய்தால் அவர் நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்யப்படுவார் என்று தெளிவாக எச்சரித்திருந்தார். இத்தகைய சூழலில், எச்சரிக்கையையும் மீறி கூடுதல் கட்டணம் வசூலித்த 67 டாஸ்மாக் ஊழியர்கள் மீது ஒரே நாளில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Source link