மதுராந்தகம் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் பரந்தாமன் அறிவிப்பு.. யார் இவர்? வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? – madurantakam by election 2026 dmk candidate paranthaman and political background

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு இணையாக 2 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் பார்க்கப்படுகிறது. ஏனெனில் தவெக, அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் செல்வாக்கை உரசிப் பார்க்கும் தேர்தலாக இது கவனிப்புக்குள்ளாகியுள்ளது.

திமுக 10 முறை வென்ற தொகுதி…இந்த முறை யாருக்கு?

இந்த இரு தொகுதிகளிலும் வெல்வது சட்டசபையில் பெரும்பான்மை பலம் இல்லாத தவெகவுக்கு எண்ணிக்கையைக் கூட்ட உதவும். திமுகவுக்கோ தனது இழந்த செல்வாக்கை மீட்க உதவும். பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்து நிற்கும் அதிமுகவுக்கு தான் இன்னும் செல்வாக்குடன் இருப்பதை நிரூபிக்க இது கை கொடுக்கும். அந்த வகையில் 3 கட்சிகளுக்குமே இந்த இடைத் தேர்தல் மிக மிக முக்கியமானது.

மதுராந்தகம் இடைத்தேர்தல்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்ட கூட்டணிகளுடன் தேர்தலை சந்தித்தது. அப்படி இருந்தும் 59 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது.

108 இடங்களில் வென்ற தவெக திமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சி அமைத்தது. அதில் காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடமும் கொடுத்தது. இடதுசாரிகள் வெளியிலிருந்து ஆதரவு கொடுத்து வருகின்றனர். இடதுசாரிகளைத் தவிர மற்ற கட்சிகள் தவெக கூட்டணியில் அங்கமாக மாறியுள்ளன.

மேலும் , அதிமுகவில் வெடித்த உட்கட்சி மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 6 எம்.எல்.ஏக்கள் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்தனர். இதில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமாரசாமியும் அடங்குவர்.

களத்தில் இறங்கிய திமுக

இதனைத் தொடர்ந்து குதிரைபேர வழக்கில் 7 தொகுதிகளுக்கானஇடைத்தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தனித்தொகுதி என்பதால் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, வரும் அக் 6 ஆம் தேதி இடைத்தேதல் நடக்க உள்ளது.

இப்படியான சூழலில்தான் தற்போது இடைத் தேர்தல் வந்துள்ளது. திமுக இடைத்தேர்தலில் போட்டியிடுமா அல்லது அதிமுகவுக்கு ஆதரவு தருமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் திமுக தனது அதிரடியான பதிலை இப்போது கொடுத்து விட்டது. தேர்தலில் போட்டியிடுவதாக வேட்பாளர்களை அறிவித்து விட்டது.

இதற்காக இன்று காலை வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை செய்த சில மணி நேரங்களில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மதுராந்தகம் தனித்தொகுதியில் ஐ.பரந்தாமன் வேட்பாளர் பின்னணி

அதன்படி ,மதுராந்தகம் தனித்தொகுதியில் ஐ.பரந்தாமன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் பின்னணி பார்க்கலாம். ஐ பரந்தாமன் திமுக சட்டத்துறை இணைச் செயலாளராக இருக்கிறார். இவருக்கு மதுராந்தகம் என்பது புதிய தொகுதியாகும். இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். கடந்த 2021 தேர்தலில் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். தொலைக்காட்சி விவாதங்களில் திறம்படப் பேசக்கூடிய இவர், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது எழும்பூர் தொகுதியில் சீட் கேட்டிருந்தார். இருப்பினும், சேகர்பாபுவுடனான சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அப்போது அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. தமிழன் பிரசன்னாவுக்கு சீட் தரப்பட்டு நிறுத்தப்பட்டார். அவர் , தவெகவின் ராஜ்மோகனிடம் தோல்வியைத் தழுவினார். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுச் சட்டமன்றத்திற்குத் தேர்வானால், திமுக சார்பில் சிறப்பாக உரையாற்றுவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தற்போது இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலை எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை திமுக வெளிக்காட்டியுள்ளதால் தேர்தல் களம் படு சூடாக மாறியுள்ளது.

Source link