மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தல் நடக்குமா? உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு.. என்ன காரணம்? – madurantakam dharapuram by elections under question as pil is filed in high court

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதன் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அதிமுக உறுப்பினர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஏற்கனவே அந்தந்த தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் பதவியை ராஜினாமா செய்த மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

வேட்புமனுக்களை ஏற்கக் கூடாது

இந்நிலையில், மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோரின் வேட்புமனுக்களை ஏற்கக் கூடாது என்றும், இடைத்தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே, மக்கள் அளித்த தீர்ப்பை புறக்கணித்து அரசியல் தேவைக்காக பதவியை ராஜினாமா செய்தவர்களின் வேட்புமனுக்களை மீண்டும் ஏற்கக் கூடாது எனக் கோரி, சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன் இந்தப் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

தேர்தல் செலவை வேட்பாளர்களே ஏற்க வேண்டும்

மேலும், இடைத்தேர்தல் பொதுமக்களின் வரிப்பணத்தில் நடத்தப்பட உள்ளதால், இதற்காக ஏற்படும் தேர்தல் செலவுகளை சம்பந்தப்பட்ட வேட்பாளர்களே ஏற்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.ஏற்கனவே தேர்தல் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இதுபோன்ற சம்பவங்களுக்கு நீதிமன்றம் அனுமதி அளிக்கக் கூடாது என்றும் வழக்கறிஞர் சுதன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்தப் பொதுநல வழக்கு, தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது கவனம் பெற்றுள்ளது.

Source link