மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெகவை ஆதரிக்குமா சிபிஐ, சிபிஎம்? முரண்படும் குதிரை பேர புகார் – expectations over cpi cpm about dharapuram madurantakam bypolls decision over tvk candidates

வரும் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரிகள் யாருக்கு ஆதரவு அளிக்கப் போகின்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏக்களை சேர்த்து கொண்டது தொடர்பாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கு நேர்மாறாக முடிவை அறிவிப்பார்களா? எனக் கேட்கின்றனர்.

தமிழக அரசியல் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் களத்தை நோக்கி திரும்பியுள்ளது. கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளில் ஆட்சியை பிடித்துள்ள தவெக, இந்த தேர்தலில் வெற்றி பெற்று தங்களது பெரும்பான்மையை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. ஏனெனில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து ஆட்சி அமைப்பதற்கான 118 என்ற மேஜிக் நம்பர் எந்த ஒரு கட்சிக்கும் கிடைக்கவில்லை. 108 இடங்கள் உடன் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து இருபெரும் திராவிட கட்சிகளை ஓரங்கட்டியது.

தவெக தலைமையில் புதிய கூட்டணி

இதையடுத்து திமுக வசமிருந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இதில் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற்றன. வெளியில் இருந்து ஆதரிப்பதாக சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் அறிவித்தன. அதன்பிறகு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி என்ற பெயரில் தவெக தலைமையில் புதிய அணி உருவானது. இதில் மதிமுக இணைந்து கொள்ள இடதுசாரிகள் விருப்பம் தெரிவிக்கவில்லை. தவெக, திமுக, அதிமுக என மூன்று கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டது. இதுவரை இல்லாத அளவிற்கு மும்முனை களமாக இடைத்தேர்தல் போட்டி அமைந்துள்ளது.

திமுகவிற்கு உருவான அரசியல் நெருக்கடி! தவெகவுடன் கூட்டணி வைக்க துடிக்கும் கட்சிகள்!

ஈபிஎஸ் தலைமை மீது அதிருப்தி

தவெக சார்பில் தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா, மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் ஏற்கனவே அதிமுகவில் போட்டியிட்டு வென்று, தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து கொண்டனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை மீதான அதிருப்தி மற்றும் தங்களது அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இத்தகைய முடிவை எடுத்துள்ளனர். அதுவும் தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த சில நாட்களில் ராஜினாமா முடிவை எடுத்து தொகுதி மக்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.

ஆளும் தவெக அரசு மீது எழும் விமர்சனங்கள்

தற்போது தவெகவிற்கு ஆதரவாக தேர்தல் களம் இருக்கிறது என்று ஒருபுறம் கூறப்பட்டாலும், கடந்த 100 நாட்களில் ஆட்சி மீதான அதிருப்தியால் எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் அளிக்கலாம் என மற்றொரு தரப்பு கூறுகிறது. உதாரணமாக, சட்டம் ஒழுங்கு பிரச்சினை, தொடர் மின் வெட்டு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, எதிர்க்கட்சிகள் மீதான விமர்சனப் போக்கு, குதிரை பேர அரசியல்இவ்வாறு பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் தாண்டி தாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் தவெக தரப்பு தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது.

இடைத்தேர்தலில் இடதுசாரிகள் நிலைப்பாடு என்ன?

இந்நிலையில் சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு அளிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்றைய தினம் உயர்மட்ட குழு கூட்டம் கூடுகிறது. இதில் என்ன முடிவுகள் எடுக்கப் போகின்றனர் என்று சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன், சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் ஆகியோர் மீது கவனம் திரும்பியுள்ளது. இடதுசாரிகளை பொறுத்தவரை மக்கள் பிரச்சினைகளுக்கு தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருபவர்கள். ஆளுங்கட்சி உடன் கூட்டணியில் இருந்தால் தவறுகளை சுட்டிக் காட்டவும், போராட்ட களத்தில் முன் நிற்கவும் தயங்குவது இல்லை. அந்த வகையில் தவெக அரசிற்கு எதிராகவும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

சிபிஎம் சண்முகம் பேசியது என்ன?

குறிப்பாக அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைந்தது பற்றி பேசியிருந்த சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம், ஜனநாயக விழுமியங்களை சிதைக்கும் வகையிலான செயல் என்று கடுமையாக குற்றம்சாட்டினர். மேலும் நாங்கள் தடுத்ததால் தான் 4 எம்.எல்.ஏக்கள் உடன் நின்றது என்ற திருமாவளவனின் கருத்தை வழிமொழிந்து பேசியிருந்தார். இவ்வாறு பேசிய அடுத்த சில நாட்களில் விராலிமலை விஜயபாஸ்கரையும், கரூர் விஜயபாஸ்கரையும் தவெக சேர்த்து கொண்டது.

உயர்மட்ட குழுவை கூட்டும் இடதுசாரிகள்

இப்படி பேசிவிட்டு இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களை ஆதரிப்பது பற்றி ஆலோசித்து முடிவெடுக்க வேண்டுமா? உடனடியாக ஆதரவு இல்லை என்று தெரிவிக்கலாமே என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் இடதுசாரிகளை பொறுத்தவரை தனி நபரை சார்ந்து செயல்படும் கட்சியல்ல. அரசியல் ரீதியாக உடனடியாக எந்த ஒரு முடிவையும் அறிவிக்க மாட்டார்கள். கட்சியின் உயர்மட்ட குழுவை கூட்டி அனைவரின் கருத்துகளையும் கேட்ட பின்னரே முடிவுகளை அறிவிப்பர். மாற்று சிந்தனைகளுக்கும் மதிப்பளிக்கும் வழக்கம் கொண்டவர்கள்.

அந்த வகையில் இன்றைய ஆலோசனை கூட்டத்தின் முடிவுகள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே கூட்டணிக்குள் செல்லாவிட்டாலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு வெளியில் இருந்து ஆதரவு தொடரும் என்று இடதுசாரிகள் அறிவித்துள்ளனர். அந்த வகையில் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெகவிற்கு ஆதரவுக்கரம் நீட்ட அதிக வாய்ப்புள்ளது.

Source link