தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 7 சட்டசபை தொகுதிகளில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 தொகுதிகளிலும் வருகிற அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், அக்டோபர் 9-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் களம் காண அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதன்படி, ஆளும் கட்சியாக த.வெ.க. மற்றும் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. அ.தி.மு.க சார்பில் மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத், தாராபுரம் தொகுதியில் பானுமதி போட்டியிடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் – 2026 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி 6.10.2026 அன்று நடைபெற உள்ள, செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், (35) மதுராந்தகம் (தனி), திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம், (101) தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மதுராந்தகம் (தனி) (35) : திருமதி கணிதா சம்பத், Ex. M.L.A., அவர்கள் தாராபுரம் (தனி) (101) கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் கழக மகளிர் அணி இணைச் செயலாளர்.
தாராபுரம் (தனி) (101): திருமதி K. பானுமதி, B.A., அவர்கள், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் மாவட்ட ஊராட்சிக் குழு 12-வது வார்டு முன்னாள் உறுப்பினர்” என்று அதில் தெரிவித்துள்ளார்.
