மதுரையில் ஃபேமஸ் என்றாலே அது மீனாட்சியம்மன் கோவில் தான். தினமும் ஆயிரகணக்கான பக்தர்கள் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், 17 ஆண்டுகளுக்கு பின் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் குடமுழுக்கு விழா செப்டம்பர் 17-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. மதுரை மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து குடமுழுக்கு விழாவில் பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.
நாட்டின் 3வது அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையம்: சாதனை படைத்த சென்னை சென்ட்ரல்
இதற்கான பணிகளை கோவில் நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதேபோல் குடமுழுக்கு விழாவுக்கான ஆய்வு பணிகளை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார், எம்.எல்.ஏ முஸ்தப்பா, கோபிசன், கருப்பையா உள்ளிட்டோர் மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் தரப்பில் 9 ஆயிரம் வி.ஐ.பி பாஸ்கள் கோவில் நிர்வாகத்திடம் கேட்டு பெறப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் செப்டம்பர் 17-ஆம் தேதி காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதனை முதலமைச்சர் விஜய் விருதுநகர் மாவட்டத்தில் காமராஜர் படித்த பள்ளிக்கூடமான கே.வி.எஸ் நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைக்க உள்ளார். காலை 7 மணி அளவில் முதலமைச்சர் விஜய் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.
தொடர்ந்து, விருதுநகரில் ரோடு ஷோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, மதுரை விமான நிலையம் வந்து விஜய் தனியார் விமானம் மூலமாக சென்னை திரும்புகிறார். ஆனால், த.வெ.க-வினர் தரப்பில் விஜய் மீனாட்சியம்மன் குடமுழுக்கு விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்துவிட்டு சென்னை திரும்புவதாக சொல்லப்படுகிறது. இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
