மத்தியப் பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் பலி; 25 பேருக்கு உடல்நலம் பாதிப்பு

போபால்: மத்தியப் பிரதேசத்தின் சாகர் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் ஒன்பது பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை துவங்கி உள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் உள்ள பண்டா தாலுகாவுக்கு உட்பட்ட பராஜ் கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 25க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு பாதிகக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

அதுமட்டுமின்றி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட எஸ்பி அனுராக் சுஜானியா தலைமையிலான போலீஸ் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையை துவங்கி உள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சாகர் மாவட்ட கலெக்டர் பிரதிபா பால் நிருபர்களிடம் கூறியதாவது: கள்ளச்சாராயம் குடித்து பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளனர். இரண்டு கிராமங்களில் டாக்டர்கள் குழு பரிசோதனைகளை நடத்தி வருகிறது. அறிகுறிகள் தென்பட்டால் டாக்டர்களை அணுக வேண்டும்.

குறிப்பாக கடந்த 24 முதல் 48 மணி நேரத்தில் மது குடித்தவர்கள் கண்டிப்பாக டாக்டர்களிடம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நாங்கள் கண்காணித்து வருகிறோம்; இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என்றார்.

Source link