சென்னை: மத்திய அரசு அனுமதி யின்றி, தமிழக நீர்வளத்துறை கட்டியுள்ள புதிய கதவணையில், காவிரி நீரை தேக்குவதில் சிக்கல் எழுந்து உள்ளது.
கர்நாடகாவில், தென்மேற்கு பருவமழை அதிகமாக கொட்டி தீர்க்கும் காலங்களில், தமிழகத்திற்கு அதிகளவில் காவிரி நீர் வருகிறது.
அத்தகைய காலங்களில், காவிரியில் நீரை சேமிக்கும் அளவிற்கு, கதவணைகள், தடுப்பணைகள் போதுமான அளவில் இல்லை. மேட்டூர், முக்கொம்பு, கல்லணை ஆகிய இடங்களில் மட்டுமே நீரை தேக்க முடியும்.
இதனால், பெரும்பகுதி நீர் வீணாக கடலுக்கு செல்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, கொள்ளிடம் ஆற்றில் கதவணைகளை கட்ட வேண்டும் என, டெல்டா விவசாயிகள் வலியுறுத்தினர்.
அதை ஏற்று, அ.தி.மு.க., ஆட்சியில், கடலுார் மாவட்டம் ஆதனுார் – மயிலாடு துறை மாவட்டம், குமார மங்கலம் இடையே, கதவணை கட்ட, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. கட்டுமானப் பணிகளுக்கு 516 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 2020ல் பணிகள் தொடங்கின.
கடந்த தி.மு.க., ஆட்சியிலும் பணிகள் தொடர்ந்த நிலையில், கடந்த ஜனவரியில் பணிகள் முடிந்தன. இப்பணிக்கு எடுக்கப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடாக, 52 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
பணிகள் முழுமையாக முடிந்த நிலையில், மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாமல், கதவணை கட்டியதால், அதில் தண்ணீரை சேமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது டெல்டா விவசாயிகள் மற்றும் சுற்றுசூழல் ஆர்வலர்களிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சி யில், மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் பணிகள் தொடங்கப்பட்டன. தி.மு.க., ஆட்சியில், 2024 டிசம்பரில் தான், மத்திய அரசின் பரிவேஷ் இணையதளத்தில் சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்யப்பட்டது.
பணிகள் தொடங்கிய பின் அனுமதி கேட்டதால், இதுவரை மத்திய சுற்றுச் சூழல்துறை அனுமதி கிடைக்கவில்லை. இதனால், புதிய கதவணையில் நீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
