மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!

திருநெல்வேலி  மாவட்டத்தில் அமைந்துள்ள  மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா இன்று (28.07.2026) நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் மொத்தம் 3,787 பேர் பட்டம் பெறத் தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் முனைவர் பட்டம் மற்றும் பதக்கங்கள் பெறவிருந்த 871 பேருக்கு ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர் நேரடியாகப் பட்டம் வழங்குவார் என பல்கலைக்கழகம் முன்கூட்டியே அறிவித்திருந்தது. இதையடுத்து, 871 பேரும் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிதம்பரனார் அரங்கில் பட்டமளிப்பு விழாவுக்காகத் திரண்டிருந்தனர். 

இத்தகைய சூழலில் தான், நிகழ்ச்சி தொடங்கிய பின்னர், 871 பேருக்குப் பதிலாக 113 பேருக்கு மட்டுமே ஆளுநர் நேரடியாகப் பட்டம் வழங்குவார் என அறிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த திடீர் அறிவிப்பால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. பல மாணவர்கள் கண்ணீர் மல்க தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். நேரடியாக ஆளுநரிடம் இருந்து பட்டம் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் வந்த நிலையில் ஏமாற்றப்பட்டதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர்.

இதனையடுத்து துணைவேந்தர், ஆர்.வி. அர்லேக்கர் தரப்பிலான அதிகாரிகள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றார். இருப்பினும், அனைவருக்கும் ஆளுநரே பட்டம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் முழக்கங்களை எழுப்பியதால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. இதனையடுத்து, , 871 பேரில் 113 பேருக்கு மட்டுமே ஆளுநர் பட்டம் வழங்குவார் என்ற முடிவு திரும்பப் பெறப்பட்டு, பட்டம் பெற தகுதி பெற்ற 871 பேருக்கும் ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர் நேரடியாகப் பட்டம் வழங்குவார் என அறிவிக்கப்பட்டது.

Source link