நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது ’மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை’ சார்பாக ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்குப் பரிசு வழங்கி வருகிறார். அந்த வகையில், இந்த ஆண்டு தஞாவூரில் விழா நடத்தி, அந்த விழாவில் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள் 11 பேருக்கு ‘நம்மாழ்வார்’ விருதும், ரூ 5 ஆயிரம் ரொக்க பரிசும் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, அவர் பேசுகையில், ”நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூரைச் சார்ந்த 11 விவசாயிகளுக்கு, மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை சார்பாக விருதும், பரிசுத் தொகையும் வழங்கி அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன். இதை எனது வாழ்நாளின் மிகப் பெரிய அர்த்தமுள்ள தருணமாக நினைக்கிறேன்.
கடந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் 11 விவசாயிகளுக்குப் பரிசும், விருதும் வழங்கினோம். அப்போது விவசாயிகள் அளித்த வரவேற்பும், அவர்களின் மகிழ்ச்சியும் எங்களுக்கு மிகப் பெரிய ஊக்கமாக அமைந்தது. கடந்த அண்டை போலவே, இந்த ஆண்டும் தஞ்சாவூரில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இன்றைய இளைஞர்கள் விவசாயத்திற்கு முன்னுரிமை தர வேண்டும். உணவை உருவாக்கும் விவசாயிகளை மதிக்கும் மனப்பான்மை சமூகத்தில் வளர வேண்டும். இயற்கை விவசாயம் என்பது வெறும் விவசாயம் அல்ல. அது மண்ணையும் மக்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் வழி முறையாகும்” என்று தெரிவித்தார்.
