மரத்துப் போன மனிதம்? : தாயும், சிசுவும் பரிதா*பமாக உயிரி*ழப்பு!

காஞ்சிபுரம் மாவட்டம் சிங்காடிவாக்கம் ஊராட்சியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் தேன்மொழி என்பவரை திருமணம் செய்து, அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். அதே சமயம் பிழைப்புகாக ஆனந்தும், அவரது மனைவி தேன்மொழியும் இணைந்து மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதனபடி இவர்கள் இருவரும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மரம் வெட்டும் வேலைக்குச் சென்றால், அங்கேயே சுமார் ஆறு மாதங்கள் வரை தங்கி பணியாற்றுவது வழக்கம் என கூறப்படுகிறது.

அந்த வகையில், காஞ்சிபுரம் அருகே பைபாஸை ஒட்டியுள்ள வெள்ளைகேட் பகுதியில் இருவரும் முகாமிட்டு, தார்ப்பாய் கொண்டு அமைக்கப்பட்ட தற்காலிக குடிசையில் தங்கி மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இத்தகைய சூழலில் தான் தேன்மொழி  ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில், மரம் வெட்டும் பணிக்காக அதன் உரிமையாளரிடம் இருந்து ஆனந்த் 20 ஆயிரம் ரூபாய் முன்பணமாக பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த பணத்தை முழுமையாக திருப்பித் தந்தால் மட்டுமே அங்கிருந்து செல்ல முடியும் என உரிமையாளர் ஆனந்திடம் கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. 

இதனால், ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்த தனது மனைவி தேன்மொழியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆனந்தால் முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தேன்மொழிக்கு திடீரென  பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆனால், உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாததால், சம்பவ இடத்திலேயே தேன்மொழியும், அவரது வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து ஆனந்த் பொன்னேரிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின் அடிப்படையில், உயிரிழந்த தேன்மொழியின் உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனைக்கு செல்ல உரிமையாளர் அனுமதிக்காததால் ஒன்பது மாத கர்ப்பிணியான பெண்ணும், அவரது வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்ததாக கூறப்படும் இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Source link