சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இதனை பி.எஸ்.மித்ரன் இயக்கியிருக்க கார்த்தி மற்றும் முதல் பாகத்தில் நடித்த ராஷி கண்ணா, லைலா, ரஜிஷா விஜயன், யூகி சேதி உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இவர்களோடு புதிதாக மாளவிகா மோகனன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் புதிதாக இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். இது அவருக்கு 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் செப்டம்பர் 10ஆம் தேதி பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொத்தம் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் படக்குழு தீவிர புரொமோஷன் பணிகளில் இறங்கியுள்ளது. அந்த வகையில் திருச்செந்தூரில் முருகனைத் தரிசித்த படக்குழு திருநெல்வேலி சென்று சர்தார் 2 படத்தின் டிரெய்லரை திரையரங்கில் திரையிடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது. இதில் கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து மதுரையில் ஒரு கல்லூரியில் பட புரொமோஷனில் ஈடுபட்டனர். இந்நிகழ்வு முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள்.
அப்போது கார்த்தியிடம் படம் வெளியாகி முதல் நாளிலேயே இணையத்தில் கசியும் சம்பவம் தொடர்கிறது, உங்களில் ஒருவர் தற்போது முதல்வராகியிருக்கார், அவருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இந்த பிரச்சனையின் தீவிரம் விஜய் சாருக்கு ரொம்ப அழகாகவே புரியும். நிச்சயம் அதற்கான கடுமையான நடவடிக்கையை அவர் எடுப்பார் என்று நம்புகிறேன். எப்போதும் சினிமா என்றால் வெறும் நட்சத்திரங்களை மட்டும் நினைக்கிறோம். ஆனால் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையும் அதில் அடங்கியிருக்கிறது. சினிமா என்பது வெறும் பொழுது போக்கு மட்டும் கிடையாது. அது நம் கலாச்சாரத்தை சொல்லும் விஷயம். அதை நாம் பாதுகாக்க வேண்டும். எல்லா கலையும் உட்கொண்ட ஊடகமாக சினிமா இருக்கிறது. அதனால் விஜய்யை பார்த்தால், மற்றவர்களை விட உங்களுக்கு நிரைய தெரியும் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்பேன்” என்றார்.
பின்பு அவரிடம் நீங்கள் அரசியலுக்கு எப்போது வருவீர்கள் என்று கேள்வி கேட்கப்பட, “எனக்கு எதற்கு அரசியல். இருக்கிற வேலையை ஒழுங்காக பார்ப்போம். மக்களை சந்தோஷப்படுத்தி பெரிய ஹிட் கொடுப்போம். அதுதான் எனக்கு முக்கியம்” என்றார்.
