மும்பை: மஹாராஷ்டிராவில் இடைவிடாது கொட்டி தீர்த்த கனமழையால், ரயில், விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
மஹாராஷ்டிராவின் மும்பை, பாந்த்ரா, அந்தேரி, காட்கோபர், முலுண்ட உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டியது. இதனால், மும்பை புறநகர் பகுதியான நாலாசோபாராவில் உள்ள சென்டர் பார்க், துலிஞ்ச் பாலம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி மழைநீர் தேங்கியது; வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதி அடைந்தனர். அங்குள்ள ரயில் நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. உள்ளூர் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால், பயணியர் சிரமத்திற்கு ஆளாகினர்.
மும்பையில் பெய்த கனமழையால், மும்பை சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இன்று பெய்த மழையால் ஓடுதள பணிகள் தற்காலிகமாக இரண்டு முறை நிறுத்தப்பட்டன. இதனால், மும்பை விமான நிலையத்தில், 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதே போல், தானே, பிவண்டி, கல்யாண், நவி மும்பை உட்பட பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது.
இதற்கிடையே, மும்பை, தானே, பால்கர், ராய்கட், நாசிக் உள்ளிட்ட, 27 மாவட்டங்களில், அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் வைத்து, விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும்படி மஹாராஷ்டிர அரசு அறிவுறுத்தி உள்ளது.
