மாங்குயிலே, பூங்குயிலே… கதை கேட்காமல் பாட்டு, படம் பார்க்காமல் பின்னணி இசை: இளையராஜா செய்த புதுமை படம்

தமிழ் சினிமாவில், தனது இசையால் பல வெற்றிப்படங்களை கொடுத்த இசையமைப்பாளர் இளையராஜா ஒரு படத்திற்கு கதையே கேட்காமல், பாடல் உருவாக்கி கொடுத்துள்ளார். அதேபோல் அந்த படத்தை பார்க்காமலே பின்னணி இசையும் அமைத்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். இது எந்த படம் என்று தெரியுமா?

ராமராஜன் – கனகா நடிப்பில் வெளியாகி 30 ஆண்டுகளுக்கு மேல் கடந்தும் இன்றைக்கும் வரவேற்பை பெறும் அளவுக்கு இருக்கும் கரகாட்டக்காரன் தான் அந்த படம்.  தமிழ் சினிமாவில் எவர் கிரீன் காமெடி காட்சிகள் நிறைந்த திரைப்படம் கரகாட்டக்காரன். இந்த படத்தின் கதையை தாண்டி இதில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் இன்றும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கவுண்டமணி – செந்தில் கூட்டணி இந்த படத்தில் பெரிய அளவில் காமெடி காட்சிகளை வொர்க்அவுட் செய்திருப்பார்கள். கரகாட்டக்காரன் 1989-ம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான படம்.

ராமராஜன் நாயகனாக நடித்திருந்த இந்த படத்தின் மூலம் நடிகை கனகா தமிழ் சினிமாவில் அறிமுகமானர். மேலும் கவுண்டமணி செந்தில், கோவை சரளா, காந்திமதி, சண்முகசுந்தரம், சந்தானபாரதி, சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, இளையராஜா இசையமைத்திருந்தார். 2 கரகாட்ட கோஷ்டிக்கு இடையே நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து காமெடியாக திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த, இந்த படத்தில், கவுண்டமணி – செந்தில் நடித்த காமெடி காட்சிகள் இன்றும் பேசப்பட்டு வருகிறது.

தனித்தன்மையுடன் இருக்கும் கரகாட்டக்காரன் படத்தில், வரும் வாழைப்பழ காமெடி, அனைத்து தரப்பு மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு காமெடி காட்சியாக பேசப்பட்டு வருகிறது. இந்த படம் கமிட் ஆகும்போது அதில் கவுண்டமணி கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தவர் எஸ்.எஸ்.சந்திரன், ஆனால் ராமராஜன் கவுண்டமணியை இந்த படத்தில் நடிக்க வைக்க வேண்டும் வலுக்கட்டாயமாக சொல்லி, அவரை மாற்றியுள்ளார். அப்படி கடைசி நேரத்தில் படத்தில் இணைந்த கவுண்டமணி, இன்றுவரை பேசப்படக்கூடிய காமெடி காட்சிகளை கொடுத்துள்ளார்.

இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் எழுதி இயக்கிய இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தை எடுக்க நினைத்த கங்கை அமரன், அப்போது பல படங்களுக்கு இசையமைத்துக்கொண்டு பிஸியாக இருந்த இளையராஜாவிடம் சென்று அண்ணே ஒரு படம் எடுக்கிறோம், கரகாட்டக்காரன் என்று பெயர் என்று சொல்ல, என்னடா இது? கரகாட்டக்காரனை வைத்து என்ன பண்ண போற என்று கேட்டுள்ளார். அதை வைத்து ஒரு கதை தயார் பண்ணிருக்கேன் என்று கங்கை அமரன் கூறியுள்ளார்.

அதை கேட்டுவிட்டு அப்படியே சென்ற இளையராஜா, சுட்சிவேஷனை மட்டும் கேட்டுக்கொண்டு, பாடல்களை உருவாக்கி கொடுத்துள்ளார். அதன்பிறகு, படத்தை பார்க்காமலே ரீரெக்கார்டிங்கும் செய்துகொடுத்துள்ளார். இந்த தகவலை கங்கை அமரனே ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார். இளையராஜா படத்தை பார்க்காமல், கதை கேட்காமல், இசையமைத்த படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் இன்றும் வரவேற்பை பெற்று வரும் பாடலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link