மாதவிடாய் கால விடுப்பு; அரசு முடிவெடுக்க ஐகோர்ட் மதுரை கிளை அறிவுறுத்தல்

மதுரை: மாதவிடாய் கால விடுமுறை வழங்குவது தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.

மாதவிடாய் கால விடுப்பு தொடர்பாக மதுரையைச் சேர்ந்த நர்மதா என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில்; கர்நாடகா, கேரளா, பீஹார், ஒடிசாவில் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவது நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு கொள்கை எதுவும் இல்லை.

அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு முழு சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கும் கொள்கையை உருவாக்க வலியுறுத்தி தமிழக தலைமைச் செயலருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து தரப்பு பெண் பணியாளர்களுக்கும் மாதவிடாய் விடுப்பு வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியது.

நீதிபதிகள் மேலும் கூறியதாவது; தமிழகத்தில் மிகப்பெரிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெண்களின் பிரச்னையை கருத்தில் கொள்வது அவசியம். பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும். கூலி வேலைக்கு செல்லும் பெண்களும் பயனடையும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு கூறினர்.

மேலும், இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு தொழிலாளர் நலத்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

Source link