சென்னை: லஞ்ச ஒழிப்பு துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட, மாநகராட்சி அதிகாரிகள் ஏழு பேரை, பணியிடை நீக்கம் செய்து, மாநகராட்சி கமிஷனர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
வழக்கு பதிவு
லஞ்ச புகாரையடுத்து, தமிழகம் முழுதும் மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கணக்கில் வராத ரொக்கம் மற்றும் ஆன்லைன் வாயிலாக பெறப்பட்ட லஞ்ச பணம் என, லட்சக்கணக்கான ரூபாய் சிக்கியது.
சிலர், ஏ.டி.எம்.,மில் எடுத்த பணம், நகை அடகு வைத்த பணம் என, ஆவணங்களை காண்பித்து, குற்றச்சாட்டில் இருந்து தப்பினர். பணம் கிடைத்ததற்கான காரணத்தை குறிப்பிட தவறியவர்கள்மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியில், திரு.வி.க., நகர் செயற்பொறியாளர் சரவணன், உதவி செயற் பொறியாளர் ரவிவர்மன், உதவி பொறியாளர் சரஸ்வதி, உதவி வருவாய் அலுவலர் மணிகண்டன்; தேனாம்பேட்டை மண்டலத்தில், கண்காணிப்பாளர் ஸ்ரீராமலு, சுகாதார அதிகாரி மஞ்சீத் ஹுசைன், துப்புரவு மேற்பார்வையாளர் கோதண்டம் ஆகிய ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே 6 பேர்
இந்த விபரங்களை மாநகராட்சி கமிஷனருக்கு, லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் அனுப்பி வைத்தனர். அதன் அடிப்படையில், ஏழு பேரையும் ‘சஸ்பெண்ட்’ செய்து, மாநகராட்சி கமிஷனர் சமீரன் உத்தரவிட்டார். ஏற்கனவே, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய ஆறு பேரை, மாநகராட்சி கமிஷனர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருந்தார்.
