ரூ.1.28 கோடி சொத்து குவிப்பு: முன்னாள் கமாண்டன்ட் மீது வழக்குப்பதிவு

கோவை: கோவைப்புதுாரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 4வது பட்டாலியனின் முன்னாள் கமாண்டன்ட் செந்தில்குமார் மீது, வருமானத்திற்கு அதிகமாக, 1.28 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக கோவை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

கடந்த, 1997ல் சப் இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்த செந்தில்குமார், படிப்படியாக கமாண்டன்ட் நிலையை பெற்றார். 2031ல் பணி ஓய்வு பெற இருந்த இவர், பெண் போலீஸ் ஒருவர் கொடுத்த பாலியல் புகார் காரணமாக கைது செய்யப்பட்டு பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். ஜாமினில் தற்போது வெளியில் உள்ளார்.

இவரது வருமானம் அடிப்படையில், 2022 அக்., 1ம் தேதி முதல் 2025 அக்., 31 வரை, 1 கோடியே ஒரு லட்சத்து 69 ஆயிரம் ரூபாய். ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஆவணங்களை கைபற்றி ஆய்வு செய்த போது, இவரின் சொத்து மதிப்பு, 2 கோடியே 4 லட்சத்து 81 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

அனைத்து ஆவணங்கள், செலவுகள், வருமானம், கடன் ஆய்வு செய்து பார்த்தபோது, 1 கோடியே 28 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளது தெரிந்தது. இவரது பெயர், மனைவி, உறவினர்கள் பெயரில், வீட்டுமனைகள், வீடு, வாகனங்கள், தங்க நகை, வங்கி இருப்பு என பல வழிகளில் சொத்துக்களை குவித்துள்ளார். இதன் படி, லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Source link