மானிய கோரிக்கை மீதான முதல்வர் பதிலுரை ஏமாற்றம்; சீர்திருத்தம் இல்லாததால் போலீசார் அதிருப்தி

திண்டுக்கல்: சட்டசபையில் போலீஸ் துறை மானியக் கோரிக்கைகள் மீது முதல்வர் விஜய் அளித்த பதிலுரையில் சீர்திருத்தம், சம்பள உயர்வு குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக போலீசார் அதிருப்தி தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் நடந்த சட்டசபை கூட்டத்தில் போலீஸ் துறை மானியக் கோரிக்கைகள் மீது முதல்வர் விஜய் பதிலளித்து பேசினார்.

அப்போது, ‘போலீசாருக்கு பணிச்சுமையை குறைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும். காலி பணியிடங்கள் நிரப்பப்படும். தீயணைப்பு, மீட்பு துறையை நவீன துறையாக மாற்றும் முயற்சி எடுக்கப்படும். குற்றவாளிகள் மீது எந்தவித சமரசமும் இல்லாமல் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்,’ என தெரிவித்தார்.

கடந்த ஆட்சிகளில் ஓரங்கட்டப்பட்ட போலீஸ் துறையின் சீர்திருத்தங்கள், கோரிக்கைகள், உட்கட்டமைப்புகள், நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் விதம் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துபோயுள்ளது. துறைரீதியான முக்கிய அறிவிப்புகள் ஏதும் இல்லை என போலீசார் அதிருப்தி தெரிவித்தனர்.

போலீசார் சிலர் கூறியதாவது: போலீசாரின் அடிப்படை ஊதியம் ரூ.18,200-ல் இருந்து ரூ.25,000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும். சீருடையில் ஆங்கிலேயர் காலத்து சில்வர் பட்டன் நடைமுறையை மாற்ற வேண்டும். வார விடுப்பு பெயரளவில் மட்டுமே உள்ளது.

போலீஸ் பற்றாக்குறையால் 90 சதவீதம் வார விடுப்பு மறுக்கப்படுகிறது. போலீசாருக்கு கட்டாய வாரவிடுப்பு வேண்டும்.

சென்னையில் போலீசாருக்கு உணவுப்படி ரூ.300 வழங்குவது போல மற்ற மாவட்டங்கள், மாநகர போலீசாருக்கும் வழங்க வேண்டும்.

ஞாயிறு பணிபுரியும் போலீசாருக்கு வழங்கப்படும் இ.டி.ஆர்.-ஐ., ஒரு நாள் ஊதியமாக உயர்த்தி வழங்க வேண்டும். பணியிட மாறுதல் கோரி கொடுக்கப்படும் மனுக்களுக்கு 6 மாதங்களுக்குள் தீர்வுகாண வேண்டும். தீபாவளி, பொங்கல், அரசு விடுமுறை நாட்களில் பணிபுரியும் போலீசாருக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும்.

மக்கள் தொகைக்கு ஏற்ப போலீஸ் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

வருடாந்திர தற்செயல் விடுப்பு நாட்களை அதிகரிக்க வேண்டும். பணி நேரத்தை வரையறைப்படுத்த வேண்டும். பதவி உயர்வை முறையாக ஒழுங்குபடுத்த வேண்டும். எரிபொருள் படி ரூ.515 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

இந்த கோரிக்கைகள் தொடர்பாக குறைந்தபட்ச அறிவிப்பு கூட இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்றனர்.

Source link