மும்பை: மாருதி சுசூகி கார்களின் விலை , ஆகஸ்ட் மாதம் முதல் ரூ.30 ஆயிரம் உயர்த்தப்பட உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.
உலோகங்கள் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக கார்களின் விலையை உயர்த்த உள்ளதாக மாருதி நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அனைத்து மாடல் கார்களின் விலை 30 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்படுகிறது. இது ஆகஸ்ட் முதல் அமலுக்கு வரும். பல்வேறு நடவடிக்கைகள் வாயிலாக செலவை குறைக்க பல மாதங்கள் முயற்சி செய்தோம். இருப்பினும் செலவுகள் தொடர்ந்து அதிகமாக உள்ளதால் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டது.
உற்பத்தி செலவுச் சுமையின் கணிசமான பகுதியை நாங்களே ஏற்றுக் கொண்டோம். அதன் தாக்கத்தை வாடிக்கையாளர்களுக்கு குறைவாக வைத்திருக்க முயற்சி செய்தோம். செலவு அதிகரிப்பின் ஒரு பகுதியை வாடிக்கையாளர்கள் மீது சுமத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விலை உயர்வு கார்களின் மாடலை பொறுத்து மாறுபடும். இவ்வாறு அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலை உயர்த்தப்படும் விவரத்தை, மும்பை பங்குச்சந்தையில் தாக்கல் செய்துள்ள விவரத்தில் மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக, பங்குச்சந்தையில் அந்த நிறுவனத்தின் பங்குகள் விலை உயர்ந்தன.
