மாவட்டங்களில் முதியோர் இல்லம்: மாநிலங்களுக்கு கோர்ட் கெடு

– சிறப்பு நிருபர் –

நாடு முழுதும் அனைத்து மாவட்டங்களிலும் முதியோர் இல்லங்கள், முதியோருக்கான மருத்துவ பராமரிப்பு வசதிகள் அமைப்பது குறித்து, புதிய நிலை அறிக்கையை தாக்கல் செய்யும்படி, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும், வழக்கறிஞருமான அஸ்வனி குமார், 2016ல் முதியோர் நலன் குறித்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ‘நாடு முழுதும் மூத்த குடிமக்கள் மற்றும் முதியோரின் அடிப்படை உரிமைகள், நலன்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன. எனவே, அனைத்து மாவட்டங்களிலும் முதியோர் இல்லங்கள் அமைக்க வேண்டும். அவர்களுக்கான ஓய்வூதியம், மருத்துவ பராமரிப்பு வசதிகள் உறுதி செய்ய வேண்டும்’ என, குறிப்பிட்டிருந்தார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி.மோகனா ஆகியோர் அமர்வில், இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நேரில் ஆஜரான மனுதாரர் அஸ்வனி குமார், ”முதியோர் நலன் சார்ந்த இந்த முக்கிய வழக்கு பல ஆண்டுகளாக விசாரிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது,” என்றார்.

மாநில உயர் நீதிமன்றங்கள் மூலமாக, இது தொடர்பான உத்தரவுகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கலாம் என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம், தற்போதைய கள நிலவரத்தை அறிய, உச்ச நீதிமன்றம் விருப்பம் தெரிவித்தது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இது தொடர்பாக, நாடு முழுதும் உள்ள அனைத்து மாநில தலைமை அரசு வழக்கறிஞர்களுக்கு மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி கடிதம் அனுப்ப வேண்டும். மாநிலங்களில் உள்ள முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை, அங்கு மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள் குறித்த புதிய அறிக்கையை, கடிதம் கிடைத்த நான்கு வாரங்களுக்குள் அனைத்து மாநிலங்களும் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக, இந்த திட்டங்களை சீராக செயல்படுத்த தேசிய சட்டப் பணிகள் ஆணை குழு மற்றும் ‘ஹெல்ப் ஏஜ் இந்தியா’ தொண்டு நிறுவனத்தின் ஆலோசனைகளையும் பெற உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

Source link