தமிழ் திரையுலகில் தனக்கு கிடைத்த நட்புகள் குறித்தும், மூத்த நடிகர்களிடம் இருந்து பெற்ற மிகப்பெரிய ஆதரவு குறித்தும் நடிகை மாளவிகா மோகனன் மனம் திறந்து பேசியுள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான பேட்ட படத்தின் படப்பிடிப்பு தளத்தில் முதன்முறையாக திரிஷா கிருஷ்ணனை சந்தித்தது முதல், அவர் தன்னிடம் காட்டிய அன்பும் அக்கறையும் இன்றளவும் தனது மனதில் நீங்காமல் இருப்பதாக மாளவிகா தெரிவித்துள்ளார்.
பெரும்பாலானவர்கள் தங்களது சொந்த உலகத்திற்குள் மட்டுமே சுருங்கிக் கொள்ளும் திரையுலகில், திரிஷாவின் இந்த அணுகுமுறை மிகவும் அரிதானது என்றும் மாளவிகா தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ திரைப்படத்தின் மூலம் மாளவிகா மோகனன் தமிழில் அறிமுகமானார். வாரணாசியின் புறநகர்ப் பகுதிகளில் நடைபெற்ற படப்பிடிப்பில், மாளவிகாவுக்கு சில நாட்கள் மட்டுமே காட்சிகள் இருந்தன. அப்போது திரிஷாவுடன் இணைந்து நடிக்கும் காட்சிகளும் படமாக்கப்பட்டன.
இது குறித்து எஸ்.எஸ். மியூசிக்கிற்கு அளித்த பேட்டியில் அந்த நாட்களை நினைவுகூர்ந்த மாளவிகா கூறுகையில், ‘பேட்ட’ படத்தில் நடித்தபோது நான் முற்றிலும் ஒரு தொடக்க நிலையில்தான் இருந்தேன். அதுதான் என்னுடைய முதல் தமிழ் திரைப்படம். ‘பியாண்ட் தி கிளவுட்ஸ்’ போன்ற ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், பெரிய அளவிலான வணிகத் திரைப்படத்தில் நான் நடித்தது அதுவே முதல் முறை.
அந்த சமயத்தில் திரிஷா என்னிடம் நடந்துகொண்ட விதம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. அவர்தான் என்னை அணுகி, எனக்கு மிகவும் வசதியாக இருக்கும் வகையில் பார்த்துக்கொண்டார். ஒன்றாக உணவு சாப்பிடுவது, பேசிக்கொண்டிருப்பது என பல திட்டங்களை ஏற்பாடு செய்து, அதில் என்னையும் சேர்த்துக்கொண்டார். நாங்கள் ஒரே ஹோட்டலில்தான் தங்கியிருந்தோம். மிகவும் அன்புடனும் உண்மையான அக்கறையுடனும் என்னை தன்னுடன் இணைத்துக்கொண்டார்.
திரையுலகில் ஒருவரின் சீனியாரிட்டி மற்றும் அந்தஸ்து, அவர்களுக்கிடையேயான உரையாடலையும் பல நேரங்களில் தீர்மானிக்கும் நிலையில், திரிஷாவின் அணுகுமுறை முற்றிலும் வித்தியாசமானதாக இருந்தது. பெரும்பாலானவர்கள் தங்களுடைய விஷயங்களை மட்டுமே பார்த்துக்கொண்டு விலகி நிற்பார்கள். ‘நான் ஏன் மற்றவர்களிடம் இவ்வளவு நன்றாகப் பேச வேண்டும்?’ என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், திரிஷா அப்படியில்லை. மிகவும் உண்மையான அன்புடனும், அன்பான அணுகுமுறையுடனும் அவர் என்னிடம் பேசினார்,” என்று மாளவிகா தெரிவித்துள்ளார்.
திரிஷாவுடனான அந்த நட்பு, ‘பேட்ட’ படப்பிடிப்பு தளத்துடன் மட்டும் முடிந்துவிடவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் மாளவிகா ஒப்பந்தமானபோது, அவருக்கு முதலில் வாழ்த்து சொன்னவர்களில் த்ரிஷாவும் ஒருவர். இது குறித்து பேசிய மாளவிகா,மாஸ்டர்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானபோது, திரிஷா எனக்கு மெசேஜ் அனுப்பினார். ‘ஹேய் பேபி, உன்னை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது மிகப்பெரிய வாய்ப்பு. வாழ்த்துகள்!’ என்று அவர் அந்தச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
மற்றொரு நடிகையின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடைவதற்கும், அவருக்கு இதுபோன்ற ஒரு செய்தியை அனுப்புவதற்கும் மிகப்பெரிய மனது வேண்டும். 2021 ஜனவரியில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மெகா ஹிட் படமாக மாறியது. இதன் மூலம் மாளவிகா மோகனனின் திரைப்பயணமும் மிகப்பெரிய திருப்பத்தை சந்தித்தது.
ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனனின் மகளான மாளவிகா, துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போலே’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். மோகன்லாலுடன் நடித்த ‘ஹிருதயபூர்வம்’, பிரபாஸுடன் நடித்த ‘தி ராஜா சாப்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, மாளவிகா நடித்துள்ள புதிய திரைப்படமான கார்த்தியின் ‘சர்தார் 2’ தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
