விருதுநகர்: சாத்தூர் அருகே கோழிப்பண்ணையில் தொடர் மின்வெட்டு காரணமாக தண்ணீர் தெளிப்பான்கள் இயங்காததாலும், வெப்பம் தாங்க முடியாததாலும் 1,000-க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்தன.
சாத்தூர் அருகே உள்ள கொக்கன்குளத்தில் கருப்பசாமி என்பவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணை உள்ளது. இங்கு சுமார் 1,500-க்கும் மேற்பட்ட பிராய்லர் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அண்மையில் அடிக்கடி அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு காரணமாகவும், பண்ணையில் கோழிகளை குளிர்விப்பதற்காக பயன்படுத்தப்படும் தண்ணீர் தெளிப்பான்கள் இயங்காததாலும், மின் விசிறிகள் இயங்காததாலும் 1,000-க்கும் மேற்பட்ட கோழிகள் இன்று ஒரே நாளில் இறந்தன.
இதுகுறித்து கோழிப் பண்ணை உரிமையாளர் கருப்பசாமி கூறுகையில், “அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு காரணமாக தண்ணீர் தெளிப்பான்களையும், மின் விசிறிகளையும் இயக்க முடியவில்லை. இது தொடர்பாக மின்வாரியத்தில் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பண்ணையில் வெப்பம் தாங்காமல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் இறந்துவிட்டன. இதனால் ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.
