மின் பயன்பாடு கணக்கெடுப்பில் அலட்சியம்; அதிக கட்டணம் வருவதால் நுகர்வோர் அவதி

சென்னை: மின் பயன்பாடு கணக்கெடுக்க, மின்வாரிய ஊழியர்கள் தாமதம் செய்வதால், குறைந்த மின்சாரம் பயன்படுத்துவோரும், அதிக மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.

வீடுகளில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாடு கணக்கெடுக்கப்படுகிறது. தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதும், வீடுகளுக்கு, 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்க உத்தரவிட்டார்; இது, கடந்த மே, 10ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இம்மாதம், 10ம் தேதியுடன் இரு மாதங்கள் முடிவதால், அன்று முதல் கணக்கெடுக்கும் வீடுகளில், 200 யூனிட் இலவச மின்சாரம் முழுதுமாக கணக்கெடுக்கப்படுகிறது.

அதற்கு முன் கணக்கெடுத்த வீடுகளில், 200 யூனிட் மின்சாரத்தை, 60 நாட்களுக்கு வகுத்து, ஒரு நாளுக்கு வரும் மின்சாரம், கணக்கெடுப்பில் வந்த மொத்த நாட்களுக்கு வழங்கப்பட்டது.

சில பணியாளர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் மின் பயன்பாடு கணக்கெடுக்க செல்வதில்லை. தாமதமாக கணக்கெடுப்பதால், குறைந்த மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு, அரசின் இலவச மின்சார சலுகை கிடைக்காமல், அதிக மின்சாரம் பதிவாகி, வழக்கத்தை விட அதிக கட்டணம் செலுத்தும் நிலைக்கு, நுகர்வோர் தள்ளப்படுகின்றனர்.

மேலும், பழுதான மீட்டர்களாலும், நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து, மின் வாரிய உயரதிகாரிகளுக்கு புகார்கள் சென்றும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளர், மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை, நுகர்வோர் பாதிப்பை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

சில பிரிவுகளில் தொடர்ந்து நடக்கும் அசாதாரணமான, ‘பில்லிங்’ முறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தையும் நிதி இழப்பையும் ஏற்படுத்திஉள்ளது.

குறிப்பாக, மீட்டர், மீட்டர் கணக்கு அல்லது செயல்முறைகளில் ஏற்பட்ட குறைபாடுகளால், வீட்டு மின்நுகர்வோருக்கு தவறான மற்றும் அதிகப்படியான மின் கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆய்வு அதிகாரிகள், தங்கள் கடமைகளை முறையாக செய்திருந்தால், இப்பிரச்னைகள் ஆரம்ப நிலையிலேயே தவிர்க்கப்பட்டிருக்கும். எனவே, ஒவ்வொரு பிரிவிலும், காலமுறைப்படி திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

மதிப்பீட்டு பணியாளர்கள், மிகுந்த கவனத்துடன் மதிப்பீடுகளை பரிசீலிக்க அறிவுறுத்த வேண்டும். கடமையில் அலட்சியம் காட்டும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது, தேவையானால் ஒழுங்கு நடவடிக்கை உட்பட, கடுமையான நடவடிக்கை எடு க்கப்பட வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

‘கடிதம் வழங்க வேண்டும்’

மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: ‘ஏப்ரல், மே மாதங்களில், வெயில் கடுமையாக இருந்ததுடன், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளும் நடந்தன. இதனால், வீடுகளில் மின் பயன்பாடு அதிகம் இருந்தது. அதற்கேற்ப மின் கட்டணம் அதிகம் வந்திருக்கலாம். வழக்கத்தை விட அதிக மின் கட்டணம் வந்தது தொடர்பாக புகார் தெரிவிக்க விரும்புவோர், சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்திற்கு சென்று, உதவிப் பொறியாளரிடம் கடிதம் வழங்க வேண்டும். அதன் அடிப்படையில், மீட்டரை பணியாளர் குழுவினர் வந்து பரிசோதிப்பர். மீட்டரில் குறைபாடு இருந்தால், கட்டணம் திருத்தம் செய்து தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link