மராட்டிய மாநிலம், நாக்பூரில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி கிளை ஒன்று இயங்கி வருகிறது. இதில், கடந்த வியாழன் (10-09-26) அன்று மாலை 6 மாணிக்கு முகத்தில் துணியைக்கட்டியபடி ஒரு நபர் வந்துள்ளார். பின்பு, அவர் தான் கையில் வைத்திருந்த பையிலிருந்த மிளகாய்ப் பொடியை, அங்கிருந்த வங்கி ஊழியர்கள் முகத்தில் வீசினார். ஊழியர்கள் தப்பியோட முயன்ற போது, அவர்களை துரத்தி துரத்தி மிளகாய்ப்பொடி தூவினார். அவர்கள் எரிச்சல் தாங்க முடியாமல் அலறித்துடித்தனர். அந்த சமயத்தில், வங்கியிலிருந்து ரூ.4 லட்சத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினார்.
அவரை பிடிக்க ஊழியர்கள் முயன்றனர். இருப்பினும், அந்த நபரை அவர்களால் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து, சம்பவம் குறித்து காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், நடந்த சம்பவம் குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தனர். பின்பு, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்.
அதில் அந்த மர்ம நபர் ஓடிய திசையைக் கண்காணித்து, அப்பகுதியில் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். காவல்துறையினரின் தொடர்ச்சியான தேடலின் காரணமாக 30 நிமிடங்களுக்குள், அந்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அந்த நபரிடம் இருந்து ரூ.4 லட்சத்தைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
