மீனவர் தினசரி உதவித்தொகை ரூ.600-ஆக உயர்வு

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. முதற்கட்டமாக கேள்வி நேரம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, 2026–27ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெற்றது .

அதன்படி, முதலில் பால்வள மேம்பாட்டுத் துறைக்கான மானியக் கோரிக்கையை அமைச்சர் விஜயலட்சுமி கொண்டு வந்தார் . அடுத்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைக்கான மானியக் கோரிக்கையை அமைச்சர் ஸ்ரீநாத் கொண்டு வந்தார் .

மீன்வளத்துறை மற்றும் மீனவர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் ஸ்ரீநாத் பல்வேறு முக்கிய அறிவிப்புக்களை வெளியிட்டார்.

தமிழ்நாடு அரசால் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையை மேம்படுத்தவும், மீனவர் நலனைக் காக்கவும் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் கட்டமைப்பு மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மீனவர் நலன் மற்றும் உதவித்தொகை உயர்வு:

  • கடலில் மீன்பிடிக்கும் போது காணாமல் போகும் மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த தினசரி உதவித்தொகை ரூ.350-லிருந்து ரூ.600-ஆக உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் ஸ்ரீ நாத் அறிவித்துள்ளார்.

  • அண்டை நாட்டினரால் சிறைபிடிக்கப்படும் மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் தினசரி உதவித்தொகை ரூ.500-லிருந்து ரூ.600-ஆக உயர்த்தப்படுகிறது.

  • இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டு, மீட்க இயலாத படகுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1.86 கோடி நிவாரண உதவித்தொகை வழங்கப்படும்.

Source link