மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் பகவான் அனுக்ரஹத்தால் சிறப்பாக நடைபெறும்: சிருங்கேரி ஜகத்குரு மஹா ஸ்வாமி அருளாசி

– நமது நிருபர் –

நம் பாரத நாட்டில் ஸனாதன தர்மத்துக்கு அன்னியர்களால் ஏற்பட்ட தொந்தரவுகள் அனைத்தையும் அகற்றுவதற்காக இறைவன் தானே அந்தந்தக் காலங்களில் அவதரித்தும் தனது அம்சமாக மஹா புருஷர்களை அவதரிக்க செய்தும் இந்த தர்மத்தை என்றென்றும் காப்பாற்றிக் கொண்டு வருகிறார்.

ஏறத்தாழ 1,200 ஆண்டுகளுக்கு முன், பிற மதத்தவர்களால் ஏற்பட்ட இன்னலை அகற்ற, பகவான் பரமேஸ்வரன், ஜகத்குரு ஸ்ரீஆதிசங்கராசார்யராக அவதரித்து தர்மத்தை மீண்டும் நிலை நாட்டினார்.

அதேபோல், 700 ஆண்டுகளுக்கு முன், அன்னியர்கள் நம்முடைய கோவில்களை சிதைத்து தர்மத்தை அழிக்க முற்பட்ட சூழலில், தக் ஷிணாம்நாய சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின், 12வது சங்கராசார்யரான ஜகத்குரு ஸ்ரீ வித்யாரண்ய மஹாஸ்வாமிகள், ஹரிஹரர் மற்றும் புக்கர் என்ற அரசர் களின் வாயிலாக விஜயநகர பேரரசை ஸ்தாபித்து தர்மத்தை காப்பாற்றினார்.

அந்த அரசர்கள் அன்னியர்களை வீழ்த்தி திருக்கோவில்களை காப்பாற்றி பூஜைகள் தவறாமல் நடக்க ஏற்பாடுகளை செய்தனர். இந்த பேரரசரான புக்கரின் புதல்வரான குமார கம்பண்ணர் தென்னக திருத்தலங்களைப் பாதுகாக்கவும், மீட்டெடுக்கவும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பங்காற்றினார். அவரது வீரச் செயல்களின் விளைவாக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், மதுரை உட்பட பல திருத்தலங்களில் காப்பாற்றப்பட்டு திறக்கப்பட்டன; வழிபாடுகள் தொடரப்பட்டன.

மதுரை மீனாட்சி குமார கம்பண்ணரின் கனவில் தோன்றி தன்னுடைய கோவிலில் பூஜைகள் தடைப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி அதனை செய்ய சொன்னது வரலாற்றில் பதிந்துள்ள நிகழ்ச்சி.

விஜய யாத்திரை வழிகாட்டுதல்:

சிருங்கேரி ஜகத்குருவின் உத்தரவை விஜயநகரப் பேரரசின் அரசர்கள் தவறாமல், செயல்பட்டதன் வாயிலாக தென்னிந்திய திருத்தலங்கள் அனைத்தும் காப்பாற்றப்பட்டு தென்னிந்தியாவில் ஆன்மிக மறுமலர்ச்சி ஏற்பட்டது; அது இன்றுவரை விளங்கி வருகிறது.

நமது ஸனாதன தர்மத்துக்கு சம்பந்தமான வேதம், சாஸ்திரம், ஆகமம், புராணம் முதலான நுால்களில் தன்னிகரற்ற பாண்டித்தியம் பெற்றுள்ள சிருங்கேரி ஜகத்குரு, தமது விஜய யாத்திரையின் அங்கமாக இந்த திருத்தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்வதுடன், அந்தந்த காலங்களில் தேவைக்கேற்ப தமது வழிகாட்டுதலையும் வழங்கி வருவது தொன்றுதொட்டு நிகழ்ந்து வருகிறது.

அவ்வகையில், மிகவும் தொன்மை வாய்ந்த மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா ஸ்வாமிகள் மற்றும் ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி மஹா ஸ்வாமிகளிடம், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் அறங்காவலர் செல்லையா, ஹிந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் மெய்வேல் சீனிவாசன் மற்றும் திருக்கோவில் அர்ச்சகர்களான சிவாச்சாரியார் சண்முகசுந்தர பட்டர், சிவாச்சாரியார் கார்த்திகேய பட்டர் ஆகியோர், அழைப்பிதழை விண்ணப்பம் செய்து ஆசி பெற்றனர்.

வரலாற்றுச் சிறப்பும் ஆன்மிக பெருமையும் மிக்க இந்த நிகழ்வு, ஸ்ரீசிருங்கேரி சாரதா பீடத்துக்கும், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலுக்கும் இடையிலான புனிதத் தொடர்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜகத்குரு மஹா ஸ்வாமிகள், தாம் சாதுர்மாஸ்ய விரத அனுஷ்டானத்தில் இருப்பதால் தற்போது பிரயாணம் செய்ய இயலாதென்றும், பின்னர் அம்மனை தரிசிக்க வருவதாகவும் பக்தர்கள் அனைவரும், இவ்விழாவில் பங்கேற்று இறை அருள் பெறவேண்டுமென்றும் பகவானின் அனுக்ரஹத்தால், திருக்கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறட்டும் என்றும் தமது அருளாசிகளை வழங்கினார்.

Source link