முதல்வர் விஜய்யின் சைகையால் வெடித்த சர்ச்சை.. திமுக எடுத்த அதிரடி முடிவு: சபாநாயகரிடம் புகார் – dmk files breach of privilege complaint with the speaker against cm joseph vijay

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில், நேற்றைய தினம் பதிலுரையின் போது முதல்வர் ஜோசப் விஜய் பேசியுள்ளது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை உருவ கேலி செய்யும் விதமாக அவர் பேசியதாக திமுகவினர் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் முதல்வர் ஜோசப் விஜய்க்கு எதிராக திமுக அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்று கொண்டிருக்கிறது.

அதாவது, தவெக ஆட்சி பொறுப்பேற்றதற்கு பின்பாக தமிழ்நாட்டில் நடக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக கடந்த வாரம் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சரமாரி விமர்சனங்களை முன்வைத்து கடும் கேள்விகளை எழுப்பினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக நேற்றைய தினம் முதல்வர் ஜோசப் விஜய் பேசினார். அப்போது சர்க்காரிய கமிஷன், மிசா குறித்தெல்லாம் அவர் சில கருத்துக்களை தெரிவித்தார்.

இதனையடுத்து கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக நிரூபிக்கப்படாத சர்க்காரிய கமிஷனை கொண்டு வந்து சட்டமன்றத்தில் விஜய் பேசியுள்ளதாக திமுகவினர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். அதோடு திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை கிண்டல் செய்யும் விதமாக மிசா குறித்து பேசுகையில் விஜய் சைகை காட்டியுள்ளதாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. இவ்விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் பல கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக சார்பாக முதல்வருக்கு எதிராக சபாநாயகரிடம் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, திமுகவின் துணை கொறடா கோவி. செழியன் சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் விதிகளை மீறியதாக உரிமை மீறல் புகார் அளித்துள்ளார். அவையில் இல்லாத முன்னாள் முதலமைச்சர் கலைஞர், முரசொலி மாறன் ஆகியோர் குறித்தும் நிரூபிக்கப்படாத குற்றச்ச்சாட்டுகள் குறித்தும் விதிகளை மீறி அவையில் பேசியுள்ளதாக கோவி. செழியன் அளித்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link