இது குறித்து இன்று (21-07-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், “தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் கூடும். தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 181-1ன் கீழ், 2026–27ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 5ஆம் தேதி பேரவையில் தாக்கல் செய்யப்படும். அதற்கு அடுத்த நாள் 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதன் பின்னர் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறும். அந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவை எத்தனை நாட்கள் நடைபெற வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்படு” எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, கரூரில் முதல்வர் விஜய் அடுத்தமுறை சட்டசபையின் கதவை மூடிவிட்டு தான் பேச வேண்டும் எனப் பேசியுள்ளார். இதற்கு ஜனநாயகத்துக்கு எதிரான கருத்தை முதல்வர் பேசியிருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறியிருக்கிறார்களே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், “ஒவ்வொரு வார்த்தைக்கும், ஒவ்வொரு வரிக்கும் விளக்கம் கொடுக்க முடியாது. ஒரு கருத்தை சொல்லிவிட்டு அதற்கு பதில் கிடைக்கும் வரை காத்திராமல் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேறுவதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அந்த வகையில் உறுப்பினர்கள் பதில் கிடைக்கும் வரை கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தான் முதல்வர் அப்படி பேசியிருக்கிறார் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர வேறு அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளக் கூடாது” என்று கூறினார்.
இதையடுத்து சட்டசபைக்குள் சட்டமன்ற உறுப்பினர்கள் சைகள் காட்டுவது விதிகளுக்கு உட்பட்டது தானா? முதல்வர் சட்டப்பேரவைக்குள் சைகை காண்பித்தது தவறு என சொல்லப்படுகிறதே? என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அதில் எந்த தவறும் இல்லை. அது விதிகளுக்கு உட்பட்டு தான் நடந்திருக்கிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்ன சைகை செய்ய போகிறார்கள் என்று எனக்கு தெரிந்தால் அனுமதி அளிப்பதா? கூடாது என்பது குறித்து நான் முடிவெடுப்பேன். முதல்வர் கை அசைவை பார்த்து என்ன செய்யப்போகிறார் என்பதை நான் புரிந்து கொண்டு அதற்கு நான் அனுமதி அளித்தேன்” என்று கூறினார்.
