முதல் பெண் மாற்றுப் பேரவைத் தலைவர்; சட்டசபையில் நடந்த வரலாற்று ஸ்வாரஸ்யம்!

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று (02-09-26) பால்வளம், மீன்வளம், கால்நடை பராமரிப்புத்துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெற்றது. 

அதற்கு முன்னதாக, கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டு வினா – விடை, கவன ஈர்ப்பு தீர்மானம் ஆகியவை நடந்தது. அதனை தொடர்ந்து, முதல்வர் விஜய் 110 விதிகளின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதையடுத்து, துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. குறிப்பாக மீன்வளத்துறை சார்பில் எம்.எல்.ஏ கேட்கும் கேள்விகளுக்கு துறை அமைச்சரான ஸ்ரீநாத் பதிலளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அவையை விட்டு வெளியேற, மாற்று பேரவைத் தலைவராக தவெக எம்.எல்.ஏ சத்தியபாமா பேரவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்தினார். சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவையில் இல்லாத நேரத்தில் துணை சபாநாயகர் ரவிசங்கர் வழக்கமாக அவையை வழிநடத்துவார். ஆனால், இருவரும் அவையில் இல்லாததால் திருப்பூர் வடக்குத் தொகுதி தவெக எம்.எல்.ஏவான சத்தியபாமாக மாற்று பேரவைத் தலைவராக சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார். தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பெண், மாற்று பேரவைத் தலைவராக சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்துவது இதுவே முதல் முறையாகும்.

தவெக எம்.எல்.ஏ சத்தியபாமா மாற்று பேரவைத் தலைவராக அவையை வழிநடத்திக் கொண்டிருக்கும் போது திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எழுந்து நின்று பேசியதாவது, “லேடி வெலிங்டன் இந்த சட்டப்பேரவைக்கு வழங்கிய ஆசனத்தில் ஒரு பெண்மணி, பேரவைத் தலைவராக அமர வேண்டும் என்பது நீண்ட காலமாக எல்லாரிடத்திலும் இருக்கக்கூடிய எதிர்பார்ப்பு. இன்றைக்கு மாற்றுத் தலைவராக நீங்கள் அந்த இருக்கையில் அமர்ந்திருப்பதை பார்க்கிற போது உள்ளபடியே பேரவை உறுப்பினர் அனைவரும் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் மகிழ்ச்சியும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்ள விரும்புகிறோம்” என்று பாராட்டினார். 

Source link