விருதுநகர்: ”அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை வழங்க ரூ.100 மதிப்புள்ள முத்திரைத்தாள் உறுதிமொழிப் பத்திரம் பெறும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும், என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சங்கத்தின் மாநிலத் தலைவர் ரமேஷ், பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை:
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது, அவர்களுக்குரிய ஓய்வூதியம், பணிக்கொடை, இதர ஓய்வூதியப் பலன்களை வழங்குவதற்கான முன்மொழிவுகள் மாநிலக் கணக்காயருக்கு அனுப்பப்படுகின்றன.
சி.பி.எஸ்., திட்டத்தின் கீழ் பணியாற்றியவர்களுக்கும் இறுதித் தீர்வு தொகைக்கான முன் மொழிவுகள் நடைமுறைகளின்படி அனுப்பப்படுகின்றன. ஆனால் சமூகநலத்துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட சில துறைகளில் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களிடம், எதிர்காலத்தில் அரசுக்கு ஏதேனும் தொகை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், அதனை எனது பணிக்கொடை அல்லது ஓய்வூதியப் பலன்களிலிருந்து பிடித்துக் கொள்ள சம்மதிக்கிறேன், என்ற உறுதிமொழிப் பத்திரத்தை ரூ.100 மதிப்புள்ள முத்திரைத்தாளில் வழங்கினால் மட்டுமே ஓய்வு பெற அனுமதிக்கப்படுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இது சட்டத்திற்கு எதிரானது. அரசு ஊழியர் நடத்தை விதிகள், ஓய்வூதிய விதிகள், உள்ளிட்ட எந்த அரசாணையிலும் ரூ.100 மதிப்புள்ள முத்திரைத்தாளில் உறுதிமொழிப் பத்திரம் வழங்க வேண்டும் என்ற கட்டாய நிபந்தனை இல்லை. சட்டத்தில் இல்லாத நிபந்தனையை நிர்வாக உத்தரவாக உருவாக்கி ஊழியர்களிடம் திணிப்பது அரசின் அடிப்படைக் கொள்கைக்கு எதிரான தாகும்.
எனவே ரூ.100 மதிப்புள்ள முத்திரைத்தாளில் உறுதிமொழிப் பத்திரம் பெறும் நடைமுறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
ஓய்வூதியப் பலன்கள் அனைத்தும் அரசாணைகளின்படி மட்டுமே வழங்கப்பட வேண்டும். இந்த நடைமுறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலன்களை தாமதமின்றி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
