முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.,க்களிடம் குதிரை பேரம் நடத்திய 'சார்' யார்? அ.தி.மு.க., 'மாஜி' உதயகுமார் கேள்வி

மதுரை: ”இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ.,க்களிடம் குதிரை பேரம் நடத்திய, அந்த ‘இரண்டு சார்’கள் யார் என்று முதல்வர் விஜய் விளக்குவாரா,” என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதய குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

மதுரையில் நேற்று அவர் கூறியதாவது:

சட்டசபையில் த.வெ.க., தனிப் பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டிய ரகசியத்தை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வாணியம்பாடி எம்.எல்.ஏ., சையது பாரூக் பாஷா, தேங்காய் உடைப்பது போல போட்டு உடைத்து உள்ளார்.

‘என்னையும் ஷாஜகானையும் சந்தித்து, ‘கோடி கோடியாக எடுத்து வந்து தருகிறோம். கையெழுத்து போடுங்கள் என்றனர். உள்ளாட்சித் துறை, போக்குவரத்து துறை அமைச்சர் பதவி வேண்டுமா என, இரண்டு பேர் எங்களிடம் கேட்டனர்’ என, பாஷா கூறியுள்ளார்.

அப்படியானால், அந்த ‘இரண்டு சார்’கள் யார். இது எந்த குதிரை பேரத்தின் கீழே வருகிறது என்பதை எல்லாம் தமிழக மக்களுக்கு முதல்வர் விஜய் விளக்குவாரா?

விலைவாசி உயர்வு, சட்டம் – ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் நடமாட்டம், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில், அரசின் நடவடிக்கைகளை மக்களுக்கு முதல்வர் விளக்கமாக சொல்வாரா?

இவ்வாறு கூறினார்.

Source link