தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
கொளத்தூர் தொகுதி தேர்தல் விவகாரம்
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றி பெற்றதைச் செல்லாது என அறிவிக்கக் கோரி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.
தேர்தலில் திமுக தோற்க இதுவே காரணம்! அரசியல் விமர்சகர் மூர்த்தி பேட்டி
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் அளித்த விண்ணப்பத்தின் அடிப்படையில் அத்தொகுதியின் 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் (VVPAT) இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன.
அப்போது முறைகேடுகள் நடந்ததாகக் கூறி மு.க.ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்,
பரிசோதனைக்கு எடுக்கப்பட்ட சில வாக்குப்பதிவு இயந்திரங்கள் திடீரெனக் கோளாறாகி நின்றதாகவும், 6 வாக்குச்சாவடிகளில் விவிபேட் சீட்டுகளை ஒப்பிட்டதில் குளறுபடிகள் கண்டறியப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் சீட்டுகளையும் மீண்டும் முழுமையாகச் சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என்றும், வி.எஸ். பாபுவின் வெற்றியைச் செல்லாது என அறிவித்துத் தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. இவ்வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு இன்று காலை 10:30 மணிக்குத் தீர்ப்பளித்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு
மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி அதைத் தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி அமர்வு, அனைத்து இவிஎம் இயந்திரங்களையும் மீண்டும் சரிபார்க்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்தது.
முன்னதாக தேர்தல் ஆணையம் தரப்பில் வாதிடுகையில் ஒரு எம்.எல்.ஏ.வின் வெற்றியை எதிர்த்துத் தேர்தல் வழக்கு (Election Petition) மட்டுமே தாக்கல் செய்ய முடியும். இதை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டால், இதே கோரிக்கையுடன் பலரும் வழக்கு தொடர வழிவகுத்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
