“ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்”

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று (03-09-26) காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெற்று அறிவிப்பு வெளியாகவுள்ளது. அதற்கு முன்னதாக கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் கோரிக்கைகளும் துறை ரீதியான அமைச்சர்கள் பதிலளித்தனர்.

அதனை தொடர்ந்து தமிழக முதல்வர் விஜய், விதி எண் 110ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதனை தொடர்ந்து புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக அவர் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளதாவது, “புனித ஜார்ஜ் கோட்டையானது கிழக்கிந்திய கம்பெனியால் 1,640 ஆம் ஆண்டு சென்னையில் வணிக செயல்பாட்டு மையத்திற்காக வாங்கப்பட்ட நிலத்தில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1,644 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 1652ல் பிரசிடென்சி நிலைக்கு உயர்த்தப்பட்ட பிறகு, பிரிட்டிஷ் ஆட்சியின் அதிகாரப்பூர்வ தலைமை இடமாக திகழ்ந்தது. சுதந்திரத்திற்கு பிறகு இது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஏறத்தாழ 400 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசின் நிர்வாக மையமாகவும் மாநிலத்தின் ஆட்சி பாரம்பரியத்தின் அடையாளமாகவும் விளங்கி வருகிறது. சுமார் 107 ஏக்கர் பரப்பளவை கொண்ட இவ்வளாகத்தில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தலைமை செயலகத்தின் பயன்பாட்டிற்காக சுமார் நான்கு ஏக்கர் நிலப்பரப்பு மட்டுமே உள்ளது.

மீதமுள்ள நிலப்பரப்பு இந்திய பாதுகாப்பு துறை மற்றும் இந்திய தொல்லியல் துறையின் ஏஎஸ்ஐ கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால் இவ்வளாகத்தை விரிவுப்படுத்தவோ மேம்படுத்தவோ முடியவில்லை. தற்போது தலைமை செயலகம் இரண்டு கட்டடிடங்களில் செயல்பட்டு வருகிறது. தலைமை செயலக பிரதான கட்டிடமாக அறியப்படும் புனித ஜார்ஜ் கோட்டை ஆளுநரின் இருப்பிடமாக கட்டப்பட்ட இக்கட்டடம் தற்போது சட்டமன்றம் முதலமைச்சர், அமைச்சர் மற்றும் தலைமை செயலாளர் அறைகள், நிதித்துறை மற்றும் பிற முக்கிய துறைகள் அங்கு செயல்பட்டு வருகின்றன. இவ்வளாகம் 2,07,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. மாநில அரசின் விரிவடைந்து வரும் நிர்வாக தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் நமது கவிஞர் மாளிகை 1978ஆம் ஆண்டு 3,75,000 சதுரடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 10 தளங்களுடன் கட்டப்பட்டது. இக்கட்டடங்களில் 30க்கும் மேற்பட்ட அரசு துறைகளின் அரசு செயலாளர்கள், அலுவலர்கள் மற்றும் 6000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இடப்பற்றாக்குறையின் காரணமாக நிர்வாக நலனை கருதி ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது.

பின்னர் அக்கட்டடமானது பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியாக மாற்றப்பட்டதால் தலைமைச் செயலகம் தொடர்ந்து கோட்டை வளாகத்திலேயே செயல்பட்டு வருகிறது. கடந்த 40 ஆண்டு காலங்களில் தலைமை செயலகத்தின் அனைத்து அரசு துறைகளின் பணியாளர்களின் எண்ணிக்கையும் நிர்வாக பொறுப்புகளும் குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்துள்ளன. இருப்பினும் தற்போதைய கட்டமைப்புகள் பெரும்பாலும் மாற்றப்படாமல் இருப்பதால் தேக்க நிலையை அடைந்துள்ளது. மேலும் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள மீதமுள்ள இடங்கள் டிபென்ஸ் மற்றும் ஏ.எஸ்.ஐ நிலமாக இருப்பதினால் கூடுதல் கட்டடிடங்களுக்கு மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ள முடியவில்லை. புனித ஜார்ஜ் கோட்டை தமிழ்நாடு அரசின் நிர்வாக வரலாற்றின் பெருமைமிக்க அடையாளமாக விளங்கி வந்தாலும் தமிழ்நாட்டின் எதிர்கால நிர்வாக வளர்ச்சிக்கும், திறன்மிக்க நிர்வாகத்திற்கும், உலகத்தரத்திலான பொது நிர்வாக உள்்கட்டமைப்பை உருவாக்கும் நோக்கிலும், ஒருங்கிணைந்த புதிய தலைமை செயலக வளாகம் அமைப்பது இன்றி அமையாதது.

புதிய தலைமை செயலக கட்டிடத்தில் அனைத்து அரசு துறைகளையும் ஒரே நிர்வாக வளாகத்தில் கொண்டு வந்து ஒருங்கிணைக்கப்படும். தீயணைப்பு வசதிகள், மாற்றுததிருனாளிகள் சென்று வர வசதிகள் மற்றும் பசுமை கட்டட தர நிலைகளுக்கு உட்பட்டு நவீன நிர்வாக வளாகம் உருவாக்கப்படும். போதுமான வாகன நிறுத்தும் இடங்கள், மாநாட்டு அரங்குகள், பொதுமக்கள் சேவை மையங்கள் மற்றும் அலுவலர்களுக்கான நவீன வசதிகளையும் ஏற்படுத்தப்படும். புனித ஜார்ஜ் கோட்டையின் பாரம்பரிய கட்டடங்களை வரலாற்று மரபுச் சின்னங்களாக பாதுகாத்து அவற்றின் பாரம்பரிய மதிப்பை வருங்கால தலைமுறைகளுக்கும் அறியும் வகையில் உருவாக்கப்படும். இவற்றை கருத்தில் கொண்டு அடுத்த நூற்றாண்டுகளில் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமை செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் சென்னையில் 20 லட்சத்து சதுர அடி பரப்பளவில் ரூபாய் 1,200 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்” என அறிவித்துள்ளார்.

Source link