“மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்”

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று (08.09.2026) உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பள்ளி கல்வித் துறை, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளின் முதன்மைச் செயலாளர்கள் மற்றும் இயக்குநர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அதோடு பால் உற்பத்தி மற்றும் டைரி மேம்பாட்டுத் துறையில் ஓராண்டு காலத்திற்கு தற்காலிகமாக ஒரு இயக்குநர் பணியிடம் உருவாக்கப்பட்டு அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சிறுதொழில் கழகத்தின் தலைவராக இருந்த தர்மேந்திர பிரதாப் யாதவ் ஐஏஎஸ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முத்திரைத் தாள் மற்றும் அச்சுத்துறை ஆணையராக இருந்த ஆர். லில்லி, கைத்தறி, கைவினைப் பொருட்கள், துணிநூல் மற்றும் கதர்த் துறையின் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநராக இருந்த ஜே. இன்னசென்ட் திவ்யா, பள்ளி கல்வித் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளி கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த பி. சந்திர மோகன், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மினரல்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக இருந்த ஈ. சரவணவேல்ராஜ் , முத்திரைத் தாள் மற்றும் அச்சுத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். பால் உற்பத்தி மற்றும் டைரி மேம்பாட்டுத் துறை ஆணையராக இருந்த அஜய் யாதவ், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநராக இருந்த எஸ். சிவராசு, பால் உற்பத்தி மற்றும் டைரி மேம்பாட்டுத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் (ஆவின்) மேலாண் இயக்குநராகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார். சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியராக இருந்த எஸ். சிவானந்தம், நிதித்துறை துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், என். முருகானந்தம் டான்சி நிறுவனத்தின் தலைவராகவும், டி.என். வெங்கடேஷ் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கே.எஸ். கந்தசாமி தமிழ்நாடு மினரல்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகவும், கவிதா ராமு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கே. செந்தில் ராஜ் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநராகவும் கூடுதல் பொறுப்பைத் தொடர்வார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link