மொத்தம் 28 நாட்கள்; 170 மணி நேரம், 14,399 வினாக்கள்: சட்டசபை நிகழ்வுகள் இறுதி அறிக்கை வெளியிட்ட சபாநாயகர்

தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த சட்டசபை கூட்டத்தொடர் இன்றுடன் (செப்டம்பர் 8) முடிவடைந்த நிலையில், சட்டசபை நிகழ்வுகள், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், எம்.எல்.ஏக்கள் பேசிய நேரம் உள்ளிட்ட தகவல்களை சபாநாயகர் வெளியிட்டுள்ளார். 

தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 4-ந் தேதி தொடங்கியது. முதல் நாளில் பொது பட்ஜெட், 2-வது நாளில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அடுத்தடுத்த நாட்களில் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றது. அதன்பிறகு ஒவ்வொரு துறைகளுக்கான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் புதிய அறிவிப்புகள் பலவற்றை வெளியிட்ட அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்து பேசியிருந்தனர், 

இதனைத் தொடர்ந்து சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் இன்று (செப்.8) நடைபெற்றது. இன்றைய தினம் கூட்டத்தின் இறுதியில் சட்டசபை உரிமைக் குழு நியமன அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், கடந்த 28 நாட்களாக சட்டசபையில் நடைபெற்ற விவாதங்கள், பேசிய நேரம், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

அதன்படி, சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் 929 வந்துள்ளது. இதில் 253 தீர்மானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, 7 தீர்மானங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டது. கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து 10 உறுப்பினர்கள் பேசியுள்ளனர், சட்டசபையில் 59 தகவல்கள் கோரப்பட்டுள்ளது. மொத்த சட்ட முன்வடிவு 13, அரசின் மொத்த தனித் தீர்மானம் 8, விதி என் 110-ன் கீழ் மொத்தம் 18 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது, இதில் 17 அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார். 

அதேபோல் வெட்டு தீர்மானங்கள் மொத்தம் 4066, 170 உறுப்பினர்கள் சேர்த்து மொத்தம் 14,399 வினாக்களை எழுப்பியுள்ளனர். இதில் உடுகுறிப்பிட்ட வினாக்கள் மொத்தம் 3455, வினா விடைகளுக்கான நேரம் 5 நாட்கள், அதிக வினாக்களுக்கு பதில் அளித்தவர் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா (4 வினாக்கள்), சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் 45, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து பேசியவர்கள் 106 உறுப்பினர்கள், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மொத்தம் .6.45 மணி நேரம் பேசியுள்ளனர். 

சட்டசபை மொத்தம் 28 நாட்கள் நடைபெற்றுள்ளது. மொத்த அலுவல் நேரம் 170 மணி நேரம், மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்ற நாட்கள் 15, உரையாற்றிய நேரம் த.வெ.க சார்பில் 51 உறுப்பினர்கள் 13.28 மணி நேரமும், தி.மு.க. சார்பில்,38 உறுப்பினர்கள் 28.35 மணி நேரமும், அ.தி.மு.க. சார்பில் 37 உறுப்பினர்கள் 12.58 மணி நேரமும், மற்ற கட்சிகளை சேர்ந்த 39 உறுப்பினர்கள் 13.52 மணி நேரமும் உரையாற்றியுள்ளனர் என்று அறிவித்துள்ளார். 

சட்டசபை நிகழ்வுகளை பார்க்க பேரவைக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 32055 பேர். இதில் ஆண்கள் 27642, பெண்கள் 4413 பேர் வந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், கடந்த 2022-ம் ஆண்டு 22651 பேரும், 2023-ல் 20137 பேரும், 2024-ல் 10754 பேரும், 2025-ல் 20123 பேரும் சட்டசபை நிகழ்வுகளை பார்க்க வந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளை விடவும் இந்த ஆண்டு அதிகபட்சமாக பார்வையாளர்கள் வந்துள்ளதாக கூறியுள்ளார்.

Source link