புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்த 17ஆம் தேதி வெளியான படம் ‘தி ஒடிஸி’. இப்படத்தில் மேட் டிமன், டாம் ஹாலண்ட், ஆன் ஹாத்வே, ராபர்ட் பாட்டின்சன், லுபிடா நியாங்கோ, சமந்தா மார்டன், ஜெண்டயா மற்றும் சார்லிஸ் தெரோன் ஆகியோர் நடித்துள்ளனர். ‘சின்காபி’(Syncopy) என்ற பேனரில் நோலன் மற்றும் அவரது மனைவி எம்மா தாமஸ் இப்படத்தைத் தயாரித்திருக்க யுனிவர்ஸல் பிக்சர்ஸ் வெளியிட்டது.
இப்படம் கிரேக்க கவிஞர் ஹோமர் எழுதிய புகழ்பெற்ற காப்பியங்களில் ஒன்றான ‘தி ஒடிஸி’ என்ற புராணக் கதையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்த கதை ஏறத்தாழ 3,000 ஆண்டுகளுக்கு முன்பு போருக்குப் பிந்தைய ஒரு வீரனின் நாடு திரும்புதலை மையமாகக் கொண்டது. இப்படம் முதல் முறையாக ஒட்டுமொத்த படம் முழுவதும் ஐமேக்ஸ் 70எம்எம்(70mm) கேமராவில் பாமாக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. வசூல்ரீதியாக இதுவரை ரூ.5,000 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்படம் எக்ஸ் வலைதளத்தில் முழுவதமாக ஒரு கணக்கில் வெளியிடப்பட்டது. இதை கிட்டத்தட்ட 2.1 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். பின்பு அந்த வீடியோ நீக்கப்பட்டது. இது குறித்து பேசிய யுனிவர்சல் பிக்சர்ஸ், “படம் அனுமதியின்றி வெளியானதை கேள்விபட்டதுடன், உடனடியாக அதை அகற்றுவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கினோம். இந்த பதிப்புரிமை மீறலை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளோம். மேலும் எங்கள் உள்ளடக்கம் மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளைப் பாதுகாக்க அனைத்து உரிய சட்ட தீர்வுகளையும் பின்பற்றுவோம்” என்றுள்ளது.
