மௌனமான நேரம் போல தவெக ஆட்சி செயல்படுகிறது – நீட் விவகாரத்தில் கனிமொழி விமர்சனம் – kanimozhi criticises tvk government over neet issue says it is acting like a silent time

சென்னையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்தில் பங்கேற்ற திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, மாணவர்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆட்சியாளர்கள் செவிசாய்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நீட் எதிர்ப்பில் திமுக தொடர்ந்து உறுதியாக இருப்பதாகவும், எந்த சூழ்நிலையிலும் மாணவர்களின் போராட்டத்திற்கு திமுக துணை நிற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் மற்றும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமையகமான பாலன் இல்லத்தில் மாணவர்கள் ஆறாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு மாணவர்களிடம் உரையாற்றினார்.

மாணவர் எழுச்சிக்கு பாராட்டு

பேசிய கனிமொழி, நீட் எதிர்ப்பு போராட்டம் தமிழ்நாட்டைத் தாண்டி தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியிருப்பது மாணவர்களின் உறுதியின் விளைவு என்று குறிப்பிட்டார். மாணவர்களின் குரலை மத்திய அரசு கேட்க வேண்டிய சூழலை இந்தப் போராட்டம் உருவாக்கியிருப்பதாகவும், அது அவர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றும் தெரிவித்தார். அனிதா தொடங்கிய எதிர்ப்பு இன்று நாடு முழுவதும் பரவியிருப்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

நீட் குறித்து திமுகவின் நிலைப்பாடு

தமிழகம் நீட் தேர்வை தொடக்கத்திலிருந்தே எதிர்த்து வருகிறது என்றும், திமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டதாகவும் கனிமொழி கூறினார். ஆனால் அந்த மசோதா ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் ஒன்றிய அரசிடம் அனுப்பப்பட்ட நிலையில், அது இன்னும் நிறைவேறாமல் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்த விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளும் தொடர்வதாக தெரிவித்தார்.

மாணவர்களுக்கு திமுக உறுதி

மாணவர்களின் போராட்டம் அமைதியான மற்றும் ஜனநாயக வழியில் நடைபெற்று வருகிறது என்றும், அவர்களுக்கு எதிராக வன்முறை அல்லது அச்சுறுத்தல் நடக்கக் கூடாது என்றும் கனிமொழி வலியுறுத்தினார். “யார் உங்களுடன் நிற்கிறார்களோ இல்லையோ, திமுக எப்போதும் உங்களுடன் இருக்கும். எந்த இடத்தில் போராடினாலும், எந்த அழுத்தம் வந்தாலும் மாணவர்களின் உரிமைக்காக நாங்கள் துணை நிற்போம்” என்று அவர் உறுதியளித்தார்.

அரசுகள் மாணவர்களின் குரலைக் கேட்க வேண்டும்

மாணவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் அரசியல் நோக்கத்திற்காக அல்ல; அவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று கனிமொழி தெரிவித்தார். போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதே அரசின் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.

நாளுக்கு நாள் கூடும் TVK செல்வாக்கு…குவியும் மாற்று கட்சியினர்!

“மௌனமான நேரம்” என ஆட்சியை விமர்சித்த கனிமொழி

செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, “தமிழகத்தில் இருக்கும் ஆட்சியைப் பார்க்கும்போது ‘மௌனமான நேரம்’ என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது. தமிழகத்திற்கே தற்போது மௌனமான நேரம் ஏற்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது” என்று விமர்சித்தார். நீட்விவகாரத்தில் மாநில அரசு தெளிவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், மாணவர்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆட்சியாளர்கள் துணை நிற்க வேண்டிய நேரம் இதுவே என்றும் அவர் வலியுறுத்தினார்.

Source link