சென்னை: தமிழகத்தில் யானை வழித்தடங்களை ஆய்வு செய்து அடையாளம் காண, தமிழக அரசுக்கு 3 மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் யானை வழித்தடங்களை அடையாளம் கண்டு அறிவிப்பு வெளியிடுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், யானை வழித்தடங்களை கண்டறிவதற்காக முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜவாலகிரி – தக்கட்டி, ஜவாலகிரி – அஞ்செட்டி, பில்லிக்கல் – ஜவாலகிரி ஆகிய 3 பகுதிகளை யானைகள் வழித்தடங்களாக அறிவித்து, கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தமிழக அரசு அமைத்த குழு 41 பகுதிகளை யானை வழித்தடங்களாக அடையாளம் கண்டுள்ளதாகக் கூறிய, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் வேணு பிரசாத், ‘இந்த 41 பகுதிகளை யானை வழித்தடங்களாக அறிவிக்கலாமா? என்பது குறித்து ஆய்வு செய்து, விரிவான அறிக்கை சமர்பிக்க அவகாசம் தேவைப்படுகிறது,’ என்று கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், யானைகள் வழித்தடங்களாக அறிவிக்க வேண்டிய பகுதிகளை அடையாளம் கண்டு, 3 மாதத்தில் அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கை டிச.,4ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
