சென்னை: ‘ரசிகர் மன்ற தலைவர்கள் போல, த.வெ.க., அமைச்சர்கள் நடந்து கொள்வது, சமூகத்திற்கு நல்லதல்ல’ என, பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
அவரது அறிக்கை: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் மற்றும் சிவகாசியில் பட்டாசு ஆலைகளில் நடந்த விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளனர்; பலர் படுகாயமடைந்துள்ளனர்.
கடந்த 2005ல், திரைப்பட வெற்றிக்காக, பட்டாசு தொழிலாளர்களுடன் முதல்வர் விஜய் அமர்ந்து பேசிய புகைப்படத்தை வைத்துக்கொண்டு, ‘பட்டாசு தொழிலாளர்களின் நலன் விரும்பி, எங்கள் தலைவர்’ என, சட்டசபையில் அமைச்சர் கீர் த்தனா அரசியல் ஆதாயம் தேடுகிறார்.
அதேநேரம், தன் சொந்த துறையை முற்றிலுமாக கோட்டை விட்டு விட்டார் என்பதற்கு, இந்த விபத்துகளே அவலச்சான்று. ரசிகர் மன்ற தலைவர்கள் போல, த.வெ.க., அமைச்சர்கள் நடந்து கொள்வது, சமூகத்திற்கு நல்லதல்ல.
லஞ்சம் வாங்காமல், ‘லைசென்ஸ்’ கொடுத்துள்ளோம் என, தம்பட்டம் அடித்தால் மட்டும் போதாது. பட்டாசு ஆலைகளில் முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதையும், முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசு உற்பத்தி அதிகரிக்கும் வேளையில், இதுபோன்ற கோர விபத்துகள் மீண்டும் நிகழாமல் தடுக்க, முதல்வர் விஜய், அமைச்சர் கீர்த்தனா உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
