சென்னை: ‘ரயில்வே ஸ்டேஷன் கவுன்டர்களில், ‘தத்கால்’ டிக்கெட் பெற, புதிய டோக்கன் முறை, ஆக.,1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது’ என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
ரயில்களில் கடைசி நேர பயணத்துக்கு தத்காலில் டிக்கெட் பெற, கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த வகை டிக்கெட் எடுக்க நாட்டிலேயே முதல் முறையாக, மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் புதிய நடைமுறை சோதனை அடிப்படையில், ஆக.,1 முதல் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும். முன்பதிவு தொடங்குவதற்கு முன்பே, பயணிகள் தங்களின் வரிசையை உறுதி செய்யும் வகையில், ‘தத்கால் டிக்கெட்’ பெற, கவுன்டர்களில் டோக்கன் வழங்கப்படும்.
ரயிலில் ‘ஏசி’ வகுப்புக்கான தத்கால் டிக்கெட் முன்பதிவு, காலை 10:00 மணிக்கு தொடங்கும் நிலையில், காலை 8:30 மணி முதல் 9:00 மணி வரை, டோக்கன்கள் விநியோகிக்கப்படும்.
‘ஏசி’ அல்லாத தத்கால் டிக்கெட் முன்பதிவு, காலை 11:00 மணிக்கு தொடங்கும் நிலையில், காலை 9:00 மணி முதல் 9:30 மணி வரை, டோக்கன் விநியோகிக்கப்படும்.
தொடக்க கட்டமாக, ஒவ்வொரு முன்பதிவு கவுன்டரிலும் ‘ஏசி’ தத்கால் டிக்கெட்டுகளுக்கு, 10 டோக்கன், ‘ஏசி’ அல்லாத தத்கால் டிக்கெட்டுகளுக்கு 15 டோக்கன் மட்டுமே வழங்கப்படும். பயணியரின் கூட்ட நெரிசலுக்கு ஏற்ப இந்த எண்ணிக்கை பின்னர் அதிகரிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
