பெங்களூரு: ‘தமிழகத்திற்கு தினமும், 3,500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு, காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உத்தரவிட்டது. ஆனால், ”தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது,” என கூறியுள்ள கர்நாடக நீர்ப்பாசன துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, ”இதை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்,” எனவும் அறிவித்துள்ளார்.
காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டம் டில்லியில் நடந்தது. தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் அதிகாரிகள் பங்கேற்று, தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். கூட்டத்தின் முடிவில், கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து தமிழகத்துக்கு தினமும், 3,500 கன அடி வீதம், அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு, ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது.
இது குறித்து, கர்நாடக நீர்ப்பாசன துறை அமைச்சரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான ராமலிங்க ரெட்டி டில்லியில் கூறியதாவது: எங்களிடம் குடிக்கவே தண்ணீர் இல்லை. இத்தகைய கடினமான சூழ்நிலையில், தமிழகத்துக்கு எப்படி தண்ணீர் திறந்து விட முடியும். மாநிலத்தின் நலனை பாதுகாக்கும் விஷயத்தில் அரசு உறுதியாக உள்ளது.
இந்த உத்தரவுக்கு எதிராக, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்வோம். மேகதாதுவில் அணை கட்டும் விஷயத்தில் தெளிவு ஏற்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கையை, விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம்.
அவர்களிடம் இருந்து அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். தமிழக முதல்வர் விஜய், நமது முதல்வர் சிவகுமாரை சந்திக்க நேரம் கேட்டார். சிவகுமாரும் நேரம் கொடுத்துள்ளார். ஆகஸ்ட் 3ம் தேதி இரு மாநில முதல்வர்களும் விவாதிப்பர்.இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ.,வைச் சேர்ந்த, கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் அளித்த பேட்டி:தமிழக முதல்வர் விஜய் இங்கு வருவதாக கூறியுள்ளார். அவர் வந்து, மேகதாது திட்டத்திற்கு எதிர்ப்பு தான் தெரிவிப்பார். அவர் எதற்காக இங்கு வர வேண்டும்.
அவரை சந்திக்க கொடுத்த அனுமதியை சிவகுமார் உடனே ரத்து செய்ய வேண்டும். எங்கள் நிலத்தில் அணை கட்ட கர்நாடகா யாருடைய அனுமதியும் பெற தேவை இல்லை என்று, மத்திய அரசு கூறியுள்ளது. பின், எதற்காக விஜய் இங்கு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, ‘தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது’ என்பதை வலியுறுத்தி, காவிரி நீர் படுகை பகுதி விவசாயிகள் கர்நாடகாவின் மாண்டியாவில் போராட்டம் நடத்தினர்.
